திங்கள், 6 ஜனவரி, 2014

சிகரம் தொட்ட அகரம்

சிகரம் தொட்ட அகரம்

நிறைய படிக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும், நோபல் பரிசு வாங்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்த ஒரு அறிவு கூர்மை மிக்க பெண்ணை படிக்க விடாமல், படிப்பை நிறுத்தி, பதினேழு வயதிலேயே திருமணம் செய்து வைக்க வீட்டார் முடிவெடுத்தால் அந்தப் பெண்ணிற்கு எப்படி இருக்கும்? கல்கத்தாவைச் சேர்ந்த சந்தா சவேரி (Chanda Zaveri) என்ற வட இந்தியப் பெண்ணிற்குத் தலையில் இடியே விழுந்தது போலத் தான் இருந்தது.  என்ன சொல்லியும் வீட்டார் கேட்காமல் திருமணம் நிச்சயித்து விட்டார்கள்.

கனவுகள் மட்டும் இருந்து உலக அனுபவம் அதிகம் இல்லாத சந்தா சவேரி இந்த திருமண ஏற்பாட்டில் இருந்து தப்பிப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தாள். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் கல்கத்தா வீதி ஒன்றில் வெயிலின் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்த கரேன் என்ற ஒரு அமெரிக்கப் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க சந்தா சவேரி அந்தப் பெண்ணின் கணவர் டேவிடிற்கு உதவி இருக்கிறாள். அதன் மூலம் கரேனும் டேவிடும் அவளுக்கு நட்பாகி இருக்கிறார்கள். அமெரிக்கா திரும்பும் முன் அமெரிக்கா வந்தால் பாஸ்டனில் வசிக்கும் தங்களைச் சந்திக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

திருமணத்திலிருந்து தப்பிக்க வழிகளை யோசிக்க ஆரம்பிக்கையில் சந்தா சவேரிக்கு அந்த அமெரிக்க தம்பதிகளின் நினைவு வந்தது. அவர்கள் ஸ்பான்சர் செய்தால் அமெரிக்கா செல்ல விசா கிடைக்கும் என்ற எண்ணம் வர அவர்களுக்குப் போன் செய்து பேசினார். டேவிட் ஸ்பான்ஸர் கடிதம் அனுப்பவே, சந்தா சவேரி வீட்டை விட்டு வெளியேறினார். தன்னிடம் இருந்த வைரத்தோடுகளை விற்று விமான டிக்கெட் வாங்கி அமெரிக்காவில் பாஸ்டன் நகருக்குப் போனார்.

பட்டப்படிப்பு இல்லாத காரணத்தால் சந்தா சவேரிக்கு நல்ல வேலை கிடைக்க அமெரிக்காவில் வாய்ப்பு இருக்கவில்லை. ஒரு மூதாட்டிக்குப் பணிப்பெண்ணாக முதல் வேலையில் சேர்ந்தார். அவர் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே அந்த மூதாட்டி இறந்து போனார். 17 வயதேயான சந்தா சவேரிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வெளிநாட்டில் இருக்கும் அந்த மூதாட்டியின் மகனுக்குப் போன் செய்த போது அவர் சவக்கிடங்கிற்குப் போன் செய்யச் சொல்லி இருக்கிறார். புதிய தேசம், புதிய இடம், இது போன்ற இக்கட்டான நிலை எல்லாவற்றையும் எப்படியோ சமாளித்து முடித்த அவருக்கு சில நாட்களில் இன்னொரு மூதாட்டியிடம் பணி செய்யும் வேலை கிடைத்தது.

முதல் நாளிலேயே அந்த மூதாட்டி அசைவ சமையல் செய்யச் சொல்ல சந்தா சவேரிக்கு உதறல் எடுத்தது. முட்டை கூட சாப்பிட சுத்த சைவ குடும்பத்தவரான அவருக்கு அசைவ சமையல் செய்யத் தெரியாது என்று அறிந்த அந்த மூதாட்டி கடையிலிருந்தாவது வாங்கித் தரச் சொல்லி இருக்கிறார். கடையும் எங்கே இருக்கிறது என்று தெரியாது என்று கேள்விப்பட்ட மூதாட்டிக்கு கோபத்திற்குப் பதிலாக அந்தச் சிறு பெண்ணிடம் கருணை பிறந்திருக்க வேண்டும். பலவற்றைக் கற்றுத் தந்து தன் மகளைப் போல அவளைப் பார்த்துக் கொண்டார். படிக்க ஆசைப்பட்டு வீட்டை விட்டு ஓடி வந்தவள் என்று தெரிந்த பின் 30000 அமெரிக்க டாலர் தொகை தந்து மேற்படிப்புக்கு வேண்டிய அடிப்படைக் கல்வியை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க அனுப்பியும் வைத்திருக்கிறார்.

படித்து முடித்து வந்த சந்தா சவேரியை டேவிட் தன் மாமனாரிடம் அறிமுகப்படுத்த அந்தப் பெண்ணிடம் தெரிந்த ஆர்வமும், இலட்சிய தாகமும் அவரையும் கவர்ந்தது. அவர் சந்தா சவேரியைத் தன் மகளாக தத்து எடுத்துக் கொண்டு தன்னுடன் கலிபோர்னியாவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு மேற்படிப்பு படித்த சந்தா சவேரியை அவர் இடையில் இந்தியாவிற்கு அழைத்து வந்து அவர் குடும்பத்தாருடனும் இணக்கத்தையும் ஏற்படுத்தித் தந்தார்.

மேற்படிப்பை முடித்த சந்தா சவேரி அடுத்தபடியாக இரு முறை (1954 மற்றும் 1962ஆம் ஆண்டுகளில்) வேதியியலில் நோபல் பரிசு பெற்ற லினஸ் பாலிங்க் (Linus Pauling) என்பவரிடம் உயிர்-வேதியியல் (biochemistry)ஆராய்ச்சிக் கூடத்தில் பணிபுரிய விரும்பினார். ஆனால் லினஸ் பாலிங்க் தன் ஆராய்ச்சிக் கூடத்தில் அங்குள்ள உபகரணங்களைக் கழுவி வைக்கும் பணியைத் தவிர வேறு எந்தப் பணியும் இல்லை என்று கூறி விட்டார்.  

அமெரிக்காவில் மிக அதிக மதிப்பெண்கள் வாங்கி மேற்படிப்பை முடித்திருந்த சந்தா சவேரி சிறிதும் யோசிக்காமல் சரி, அந்த வேலையையாவது தாருங்கள். உங்களிடம் ஏதாவது வேலை பார்க்க விரும்புகிறேன் என்று கூறி வேலைக்குச் சேர்ந்து விட்டார். ஆராய்ச்சி செய்து முடித்து விட்டு ஆராய்ச்சியாளர்கள் சென்ற பின் அங்கு சென்று அந்த உபகரணங்களைக் கழுவி சுத்தம் செய்து கொண்டே தன் கவனிக்கும் திறனால் நிறைய தெரிந்து கொண்டார். அவர் அறிவுத் திறமையையும், ஆர்வத்தையும் லினஸ் பாலிங்க் கவனித்தார்.

90 வயது ஆகியிருந்த அவருக்கு, தான் இனி அதிக காலம் வாழ மாட்டேன் என்று தோன்ற ஆரம்பித்திருந்திருந்ததால் சாவதற்கு முன் தன் அனுபவ அறிவை அந்த இளம் பெண்ணிற்குச் சொல்லிக் கொடுத்து விடத் தோன்றியது. நான்கு ஆண்டுகள் சந்தா சவேரிக்குக் கற்பித்து விட்டு அவர் காலமானார்.

அவரிடம் கற்றதை அடிப்படையாக வைத்து மேலும் பல ஆராய்ச்சிகள் செய்து B2 Actigen என்ற தோல் சம்பந்தமான மருந்தை முதன்முதலில் கண்டு பிடித்தார். ஆரம்பத்தில் மூதாட்டிகளுக்குப் பணி விடை செய்கையில் படுத்த படுக்கையாக இருக்கும் நபர்கள் முதுகெல்லாம் புண்கள் ஆவதைப் பார்த்து மனம் வருந்தி இருந்த அவர் தொடர்ந்து செய்த ஆராய்ச்சிகளில் தோல் புண்ணாகாமல் இருக்கும் மருந்துகள்/க்ரீம்கள், தோல் சுருக்கங்கள் இல்லாமல் இருக்கும் மருந்துகள்/க்ரீம்கள் கண்டு பிடித்தார். அவருடைய கண்டுபிடிப்புகளை அவரே தயாரித்து விற்பனை செய்யும் Activor என்ற கம்பெனியை ஆரம்பத்தார். சிறிது காலம் கழித்த பின்  Actiogen என்ற கம்பெனியை லாஸ் ஏஞ்சல்ஸில் ஆரம்பித்தார். அதன் பின் அவர் தன் வாழ்வில் திரும்பிப்பார்க்க வேண்டி இருக்கவில்லை. கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விட்டார். இன்று பல நூறு கோடிகள் வியாபாரம் நடக்கும் நிறுவனமாக அது உள்ளது.

செல்வந்தர் வீட்டு மகளாய் பிறந்து சீரும் சிறப்புமாக வளர்ந்து வந்த பெண் தன் இலட்சியத்திற்காக எடுத்துக் கொண்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே அந்த வீட்டு மூதாட்டி இறந்ததை அபசகுனமாக நினைத்து அவர் தளர்ந்திருந்தாலும், பணிப்பெண் வேலைகள் தன் அறிவுத் திறமைக்கு உகந்தது அல்ல என்று நினைத்திருந்தாலும் இன்று நமக்கு அவரைத் தெரியாமல் போயிருக்கும். அவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்தது கல்வி கற்று முடியும் வரை மட்டும் அல்ல. மேற்படிப்பு படித்து முடித்த பின்னும் அந்த வேலையை லினஸ் பாலிங்கின் ஆராய்ச்சிக் கூடத்தில் அவர் செய்யத் துணிந்தது அவருடைய அறிவு தாகத்தையும், வெற்றிக்காக எந்த உழைப்பையும் செய்யத் தயங்காத உறுதியையும் காட்டுகிறது. 

இன்று மிகப் பெரிய நிறுவன அதிபராக இருந்த போதும் அவர் தன் ஆராய்ச்சிகளை விடவில்லை. அதற்கு அவர் இப்போதும் முக்கியத்துவம் தருகிறார். அதே நேரத்தில் எல்லா நேரமும் ஆராய்ச்சி, வியாபாரம் என்று அதிலேயே மூழ்கி விடாமல் சந்தா சவேரி தனக்கு மிகவும் பிடித்த ஓவியம் தீட்டுதல், அர்ஜெண்டினாவின் டாங்கோ நடனம் ஆகியவற்றிற்கும் நேரம் ஒதுக்கிக் கொள்கிறார்.

இலக்கை அடைய செய்ய நேர்கிற எந்த நேரான வேலையும் கீழானதல்ல.வெற்றிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை என்ன ஆனாலும் சரி கண்டிப்பாகச் செய்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருப்பது தான் வெற்றிக்கான ஒரே வழி என்கிறார் சந்தா சவேரி. சூழ்நிலைகளில் அது சரியில்லை, இது மாற வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால் எதுவும் முடியாது என்கிறார் அவர்.

அகரத்தில் இருந்து சிகரம் வரை செல்ல விரும்பும் எவருக்கும் இதுவல்லவோ மிகப் பெரிய பாடம்!


-     நன்றி- கணேசன்

சனி, 7 செப்டம்பர், 2013

பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!


பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!



எனது நண்பர்புதிதாக ஒரு ஃப்ளாட் வாங்கியிருந்தார் அதில் கெய்சர், வாஷிங்மெஷின், வாஷ்பேஸின் ஆகியவற்றை பொருத்தவேண்டியிருந்தது. எனக்கு ப்ளம்பர் நண்பர் ஒருவர் உண்டு. அவரைநண்பர் வீட்டுக்கு வரவழைத்தேன். அவர் நல்ல திறமைசாலிதான். ஆனால் அன்று ஏனோ கெய்சரை பொருத்தி டெஸ்ட் செய்த போது சூடு ஏறவில்லை. பிறகு தவறை கண்டுபிடித்து மீண்டும் பரிசோதிக்க முயற்சித்தபோது மின்சாரம் போய்விட்டது. பொருத்துவதற்காக ட்ரில்லிங் செய்தபோது, டிரில் பிட் உடைந்து விட்டது. வாஷிங்மெஷினில் நிப்பிள் மேட்ச் ஆகவில்லை. ஆக அவற்றை பொருத்த ஏதுவாக என்னையும் கடைக்கு அழைத்தார். கூடச் சென்று வாங்கி கொடுத்தேன். அவரது வீடு கடை அருகில் தான் இருந்தது. வீட்டிற்கு ஒரு நிமிடம் வாருங்கள் என அழைத்தார். நான் மறுத்தும் மிகவும் வற்புறுத்தி அழைத்து சென்றார். 


வீட்டுவாசலில் ஒரு செடி வளர்ந்திருந்தது. அதனை ஒரு நிமிடம் தொட்டவர், பிறகுஉள்ளே அழைத்து சென்றார். அவரை பார்த்ததும் குழந்தைகள் ஓடி வந்தன. ஒவ்வொன்றாக தூக்கி கொஞ்சி, இறக்கி விட்டார்.முகமலர்ச்சியுடன் வரவேற்ற அவரது மனைவி உள்ளே சென்று சில நிமிடங்களில் சூடான காப்பி கொண்டு வந்தார். இதனிடையே ப்ளம்பர் நண்பர், மனைவி, குழந்தைகள் பற்றி சுவையாக கூறி கொண்டிருந்தார். 

காப்பியை குடித்து விட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றேன். என் மனத்தில் ஒர சந்தேகம். ஏன் பிளம்பர் வாசலில் இருந்த செடியை நின்று தொட்டு சென்றார்? 

அடுத்தநாள் அவர் வந்ததும் என் சந்தேகத்தை கேட்டேன். நேற்று நான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் டென்ஷனானேன். ஆனால் அதே பதற்றத்துடன் வீட்டுக்குள் சென்றாள் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதனால் என் கவலை. டென்ஷன் எல்லாவற்றையும் அந்த செடியில் இறக்கிவிட்டு நாளை மீண்டும் எடுத்து கொள்கிறேன் எனக்கூறி இலேசான மனத்துடன் உள்ளே சென்றேன் என்றார். நான் வியந்து நின்றேன். 

இது உணர்த்துவது என்ன? 

பிரச்னைகள், எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. õக நாம்தான் சில நேரம் அதனை விலக்கி வைக்க வேண்டும். 

ஆபீஸில் பிரச்னையா? பொது வேலைக்குசென்ற இடத்தில் பிரச்னையா? அதனை மறந்தும் வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள். அந்த பிரச்னைகளை, வாசலிலேயே மாட்டி வைத்து, மனைவி, குழந்தைகளை சந்திக்கபோகிறோம் என்ற மகிழ்ச்சியில் தினமும் மாலையில் புது மனிதராக நுழையுங்கள். இரவு நல்லபடி கழியும். அடுத்த நாள் புதுத்தெம்புடன் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து விடுவோம்.

நன்றி-மங்கையர்மலர்

ஸ்ரீசுதர்சன மகா சக்கரம்.


WEDNESDAY, SEPTEMBER 4, 2013

ஸ்ரீசுதர்சன மகா சக்கரம்.

                                    ஸ்ரீசுதர்சன மகா சக்கரம்.

ஸ்ரீமகா விஷ்ணுவை நினைக்கின்ற போது நமக்கு அழகொழுக நிற்கும் நாராயணனோடு, அவரது திருக்கரங்கள் தாங்கி நிற்கும் சங்கும் சக்கரமும் காட்சி தருகின்றதல்லவா? அந்த சக்கரமே சுதர்சன சக்கரம்; அது 108 கூர்மையான முனைகளைக் கொண்ட சக்கரம் என்கிறது புராணங்கள். ஸ்ரீமன் நாராயணனுடைய நான்கு கரங்களில் வலது பின் கரத்தில் தாங்கியிருப்பது சுதர்சன சக்கரம். இடது முன் கரத்திலிருப்பது சங்கு. மற்ற இரு கரங்களிலும் ஒன்றில் கதையும் மற்றதில் தாமரையும் இருப்பதை நாம் தரிசனம் செய்திருக்கிறோம்.

நாராயணனுடைய கரத்தில் தங்கியிருக்கும் இந்த சுதர்சனமே எதிரிகளை சம்ஹாரம் செய்யும் வலிமையான ஆயுதமாகப் புராணங்கள் விளக்குகின்றன. இந்த சுதர்சனத்தைத் தாங்கியிருப்பதிலிருந்தே உயிர்களைக் காக்க எதிரிகளை சம்ஹாரம் செய்யும் காக்கும் கடவுளாக மகாவிஷ்ணு திகழ்வது தெரிகிறதல்லவா?

இந்த 'சுதர்சனம்' எனும் சொல் இருவேறு சம்ஸ்கிருத சொற்களால் உருவானது. இதில் 'ஸு' என்பது தெய்வீகத் தன்மையுள்ள என்பதையும், 'தர்ஸனம்' என்பது காட்சி என்பதும் பொருள் தருகிறது. புனிதமான அல்லது நன்மை பயக்கும் காட்சி என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். புனிதமான ஹோமங்களை நடத்தும்போது சுதர்சனம் வழிபாடு செய்யப்படுகிறது. இதனால் தீமைகளையும், தீயசக்திகளையும், எதிர்மறையான செயல்பாடுகளையும் நீக்கி நன்மைகளைப் பயக்கச் செய்கிறது. சக்கரம் ஒரு உருளை, அது ஓரிடத்தில் தங்காதது என்பதும் தெரிகிறதல்லவா, அதுபோலவே சுதர்சன சக்கரம் வேதகால ஆயுதங்களில் ஓரிடத்தில் தங்காது சுழன்று தீமைகளை அழிக்க வல்லது என்பது புலனாகிறது.

சுதர்சன சக்கரம் குறித்து பல்வேறு செய்திகள் சொல்லப்பட்டாலும், வைணவ சம்ப்ரதாயத்தின்படி மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும் ஆயுதமாக, தீமைகளை வென்று நன்மை பயக்கும் ஆயுதமாக இது பார்க்கப் படுகிறது. ஒரு வரலாற்றுச் செய்தியின்படி மகாவிஷ்ணுவுக்கு சிவபெருமான் இந்த சக்கரத்தைக் கொடுத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மற்றொரு செய்தியின்படி விஸ்வகர்மா தயாரித்துக் கொடுத்தது இந்த சுதர்சனம் என்பர்.

சுதர்சன சக்கரத்தின் பயன்பாடு இந்து புராணங்களில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. ரிக், யஜுர், சாமவேதங்களிலும், புராணங்களிலும் இது தீமையை அழித்து நல்லோரைக் காக்கும் சக்கரமாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. மகாபாரதத்தில் சிசுபாலனின் தலை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவால் இந்த சுதர்சன சக்கரம் கொண்டு வெட்டப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. சிசுபாலனின் 100 தவறுகள் வரை பொறுத்துக் கொண்ட கிருஷ்ண பரமாத்மா அந்த எல்லையை அவன் தாண்டியதும் இந்த தண்டனையை அவனுக்கு அளித்ததாக மகாபாரதம் கூறுகிறது. பாற்கடலைக் கடைய மந்தர மலையை இந்த சுதர்சனம் கொண்டுதான் வெட்டி கடலைக் கடைய பயன்படுத்தியதாகப் புராணம் கூறுகிறது.

சுதர்சன சக்கரத்தை தமிழில் ஆழ்வார்களும், வைணவர்களும் சக்கராத்தாழ்வார் என்ற பெயரில் வணங்கி வருகிறார்கள். எப்போதெல்லாம் தாங்கமுடியாத துன்பங்களாலும், எதிரிகளாலும் வேதனைப் படுகிறார்களோ அப்போதெல்லாம் சுதர்சனத்தை வழிபட்டு துன்பத்திலிருந்து விடுபெறுகிறார்கள். அப்படி சுதர்சனத்தின் கருணையை, பாதுகாப்பைப் பெறுவதற்காக சுதர்சன ஹோமம் செய்கிறார்கள். அக்னி மூட்டி, அதில் சுதர்சனரையும், விஜயவல்லியையும் அதில் ஆவாஹனம் செய்து ஹோமத்தீயில் நெய் முதலான ஹோம திரவியங்களைப் பெய்து வழிபாடு செய்வதன் மூலம் வேண்டிய பலன் கிட்டுகிறது.

சுதர்சனருக்கு முக்கியத்துவம் தந்து பல ஆலயங்கள் இருக்கின்றன. குறிப்பாக தென் இந்தியாவில் நாகமங்கலம் எனுமிடத்தில் ஸ்ரீ சுதர்சன பகவான் கோயிலிலும், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஸ்ரீ சுட்ஹர்சன சன்னிதியிலும், கும்பகோணம் சக்ரபாணி ஆலயத்திலும், மதுரைக்கருகிலுள்ள திருமோகூர்  ஆலயத்திலும், 
ஒப்பிலியப்பன் ஆலயத்திலும், காஞ்சிபுரம் ஸ்ரீ தேவனாதசாமி ஆலயத்திலும்  சுதர்சனர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

எதிரிகளாலும், கெட்ட ஆவிகளாலும், உடல் நலக் குறைவினாலும், வியாதிகளினாலும் துன்பம் மிக உழன்று வருந்துவோர் சுதர்சன ஹோமம் செய்விப்பதன் மூலம் அந்த துன்பங்களிலிருந்து விடுதலை அடைகிறார்கள் என்பது நாம் அறிந்ததொன்று. அவை தவிர தொழிலில் முன்னேறவும், வர்த்தகம் பெருகவும் இந்த ஹோமத்தை சிரத்தையுடன் செய்கின்றனர். இந்த ஹோமத்தை எப்போது செய்யலாம்? மகாவிஷ்ணுவுக்கு பிரிதீயான நாட்களில் இந்த ஹோமத்தைச் செய்வது சாலச் சிறந்தது. குறிப்பாக ஏகாதசி, த்வாதசி, பெளர்ணமி ஆகிய நாட்களில், அதிலும் இவை புதன் அல்லது சனிக்கிழமைகளில் இருந்தால் சிறப்பானது என்று சொல்லப்படுகிறது. இந்த சுதர்சன ஹோமத்தை மிகுந்த சிரத்தையுடன் செய்திட வேண்டும். ஏனோதானோ வென்று செய்திடமுடியாது. இது மிக சக்திவாய்ந்த ஹோமம் என்பதால், எண்ணத்தாலும், நடத்தையாலும், உடையாலும் சுத்தமாக இருந்து, மந்திரங்களை அக்ஷரப் பிசகில்லாமல் சொல்லிச் செய்ய வேண்டும். தகுந்த, அதற்கான சிரேயஸ் பெற்றிருக்கிற ஆச்சார்யார்களைக் கொண்டு செய்வது சாலச் சிறந்தது. அப்படிப்பட்ட, இதனைச் செய்யக்கூடிய அருகதையுள்ள ஆச்சார்யார்கள் யார் என்பதை நன்கு அறிந்து தெரிந்து செய்திட வேண்டும்.

இந்த ஹோமத்தால், அல்லது ஜபத்தால் ஆகும் நன்மைகள் எவை? பீடா பரிஹாரம் முதலாவது. அடுத்து பாப நாசனம், செய்த வினைகள் தீருவது, நாராயணனிடம் அடிபணிந்து வேண்டி செய்த பாபங்களைத் தீர்த்துவிடுதல் இதன் மூலம் முடியும். உடல் நலம் தளர்தல், மன உளைச்சல், பிரம்ம ராக்ஷஸ் தொல்லை போன்றவற்றிலிருந்து காக்கும் வல்லமை படைத்தது இது. சுதர்சன அஷ்டகம் எனும் பெயரில் ஒரு ஸ்லோகத்தை ஸ்வாமி தேசிகன் இயற்றித் தந்திருக்கிறார். ஒரு முறை கிராமம் ஒன்றில் பிளேக் எனும் கொடிய தொற்று நோய் பரவியதாம். அப்போது தேசிகன் இந்த அஷ்டகத்தை இயற்றிப் பாட, அது உடனே அடங்கி ஒடுங்கியதாக வரலாறு.

இந்த ஹோமத்தின் நிறைவில், கர்த்தா நல்ல ஆரோக்கியமும், செல்வமும், வாழ்வில் முன்னேற்றமும் அடைவார் என்பது உறுதி. சுதர்சன மூலமந்திரம் குரு உபதேசத்தின் மூலம் பெற்றவர்களால் உரிய முறையில் பயன்படுத்தப் படுகிறது. பலகோடி முறை சுதர்சன மந்திரம் உச்சாடனம் செய்து, சுதர்சனத்தின் மூலம் அரிய பெரிய காரியங்களை அவர்களால் செய்ய முடிகிறது.

திங்கள், 27 மே, 2013


சுஜாதாவின் பத்து அறிவுரைகள் (கண்டிப்பாக படிக்கவும் )

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

பணம் இருந்தால்...!



பணம் இருந்தால்...!

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது. -ஸ்மித். ..

.பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம் - ஜீவெனால்.

பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள். -வீப்பர்

. நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். - பெர்னார்ட்ஷா.

பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான். - வால்டேர்.

பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும். -ரஸ்கின்.

பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும். - ஷோப்பன் ஹொபர்.

சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை! - கோல்ட்டஸ்.

பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும். - ஆலிவர் வெண்டல்.

பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே. - தாமஸ் பெயின்.

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும். - பிராங்க்ளின்.

பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன. - தாமஸ் புல்லர்.

பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை - டென்மார்க் பழமொழி.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை - பாரசீகப் பழமொழி.

பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை - ஆஸ்திரேலியாப் பழமொழி.


படித்ததில் பிடித்தது

ஞாயிறு, 26 மே, 2013

அடுப்பில்லா இயற்கை உணவு சமையல் பயிற்சி மற்றும் இயற்கை வாழ்வியல் விழிப்புணர்வு முகாம்


இயற்கை ஞானி நம்மாழ்வார் ஐயாவின் வழிகாட்டுதலுடன் இயற்கை சுழலில்

வானகம் ( சென்னை ஒருங்கிணைப்புக் குழு ) மற்றும் தாய் வழி இயற்கை உணவகம் சிவகாசி & சிவகாசி மூலிகை உணவு பயிற்சி மையமும் , பிரபஞ்சம் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் அடுப்பில்லா இயற்கை உணவு சமையல் பயிற்சி மற்றும் இயற்கை வாழ்வியல் விழிப்புணர்வு முகாம்.

நாள் : ஜூன் 8 மற்றும் 9 ம் தேதி, 2013 ஞாயிறு, சனி

இடம் : 28, பொன்னி அம்மன் கோவில் மேடு, கொசவபாளயத்தில், திருநின்றவூர், சென்னை.

பயிற்சி நன்கொடை : ரூ. 1000/- மட்டும்..
இயற்கை உணவு சேர்த்து..

முன் பதிவு செய்ய : 90806 66123 ( ஜெகதீஸ் ), 94435 75431 ( ஜெ. கருப்பசாமி )

ஒரு நாள் இயற்கை வாழ்வியல் மற்றும் அடுப்பில்லா இயற்கை உணவு சமையல் பயிற்சி திருநின்றவூரில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

அதில்

1. இயற்கை வாழ்வியல்

( தொப்பை , உடல் பருமன் , சர்க்கரை நோய், இருதய கோளாறுகள், சுக பிரசவம், தைராய்டு, மற்றும் பல நோய்களுக்கு வீட்டிலே இருக்கும் அஞ்சறை பெட்டி மற்றும் எளிய இயற்கை உணவு காய்கறி, பழங்களின் மூலமே தீர்வு காணும் இயற்கை வழி உணவு மருத்துவம்..)

2. வீடுகள், நோயாளிகள், திருமண நிகழ்வுகள், கடற்கரைகளில், பள்ளி & கல்லூரிகளில் போன்றவற்றுக்குத் தேவையான அடுப்பில்லா இயற்கை உணவு சமையல் பயிற்சி

3. இயற்கை உணவகம் அமைக்க... மதிப்பு கூட்டி சந்தப்படுத்துதல்... 4 .முதலீடு இல்லாமல் சுயதொழில் மற்றும் பகுதி நேர தொழில்கள் செய்யவும் கற்றுத் தருகிறோம் ...

5. மூலிகை மருத்துவம் & சமையல்

6. நம்மாழ்வார் ஐயாவின் இயற்கை வேளாண்மையின் அவசியமும், வீட்டுத் தோட்டம், மூலிகை வளர்ப்பு & பயன்பாடு, காடு வளர்ப்பு, மாடித்தோட்டம்......

7. யோகா தெரபி, தியானம் 8. பழ மருத்துவம் மற்றும் பல பயிற்சிகள் கற்றுத்தரப் படுகிறது.

பயிற்சியை சிவகாசி இயற்கை உணவியல் நிபுணர்
திரு . மாறன் ஜி யும் ( தாய்வழி இயற்கை உணவகம் ),

கும்பகோணம் இயற்கை உணவு தாயாரிப்பாளரும், யோக கலை ஆசிரியருமான A.S. ரமேஷ் அவர்களும்...

இயற்கை ஞானி நம்மாழ்வார் ஐயாவின சென்னை வானகம் ஒருங்கிணைப்புக் குழு , ஜெகதீஸ் அவர்களும் இணைந்து நடத்துகின்றர்.....

1. Training on how to Prepare Natural Foods
2. Entrepreneurship Training on How to establish Natural Food Restaurant
3. Healthy Herbal food preparation
4. Natural Medication through Natural Food for all Disease

குறிக்கோள் :
1. நஞ்சில்லா உணவு 2. மருந்தில்லா மருத்துவம் 3. சுவரில்லாப் பள்ளிக் கூடம்

தமிழ்நாட்டு விளையாட்டு

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர் தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.

சிறுவர் (பையன்கள்) கைத்திறன்
கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு

(எல்லா வயதினரும், ஆண்
பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி

கால் திறன்
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

அணி விளையாட்டு
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

குழு விளையாட்டு
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

நீர் விளையாட்டு
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

உல்லாசம்
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா

சிறுமியர்
உடல்-திறன்
1. சில்லு (சில்லி)

கைத்திறன்
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்

உல்லாசம்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு

கலை விளையாட்டு
1. கும்மி

இருபால் இளைஞர்
உடல் திறன்
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை

உல்லாசம்
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்

உத்தித் திறன்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்)
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்

கன்னியர்
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்

பாப்பா விளையாட்டு
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..

கலை விளையாட்டு
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்

தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

சொல் விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி

புதன், 10 ஏப்ரல், 2013

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்...





தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்...

தன்னம்பிக்கை இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். ஒவ்வொருவருமே திறமையானவர்கள்தான். அவர்களுக்குள் இருக்கும் அறிவாற்றல் மதிப்புமிக்கது. அதை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே பிரகாசம் தெரியும்.

ஆழ்கடலில் இருக்கும் சகதியில் மூழ்கி தேடிக் கண்டுபிடித்த பிறகுதான் விலை மதிப்புமிக்க முத்துக்களைப் பெற முடியும். அனைத்து மலர்களும் நறுமணமிக்கவை. அதில் வேறுபாடு இருப்பதில்லை. பூவை நாடிச் செல்லும் வண்டுகளும் வேறுபாடு பார்ப்பதில்லை. அதன் நோக்கம் தேன் சேகரிப்பது மட்டுமே.

மனிதர்களின் மனதில் கோடிக்கணக்கில் சிந்தனைகளும், ஆற்றலும் தேங்கிக் கிடக்கின்றன. அதை வீணடிப்பவர்கள் பலர். கடலோர மணலில் காணப்படும் விலையுயர்ந்த தாதுக்களை முறைப்படி சுத்திகரித்து அதிலிருந்து பிரிக்க முடியும். அதன்பிறகுதான் அதன் பெருமை உலகுக்குத் தெரிய வருகிறது. மனிதர்களின் ஆற்றலும் அதைப் போன்றதுதான்.

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் செய்த தவறு, ஏன்? எதற்கு? எப்படி? என்று வினா தொடுத்ததுதான். அப்படி கேள்வி எழுப்பியதால்தான் தலைசிறந்த தத்துவஞானியாக அவரின் பெருமை உலகுக்கு தெரியவந்தது. எனவே வாழ்க்கையில் முன்னேற மனோதிடம், உறுதி, எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும். முயற்சிதான் முன்னேற வழி வகுக்கும். விண்ணில் பிரகாசிக்கும் சந்திரனின் தொலைவு அதிகம். ஆனாலும் அதன் வெளிச்சம் உலகம் முழுவதும் ஒளிர்கிறதல்லவா?

எழில் நிறைந்தது இந்த உலகம். எதையுமே பெறலாம். ஆனால் கடின முயற்சி வேண்டும். மலையிலிருந்து பெயர்க்கப்பட்ட கற்பாறையில் சிற்றுளியால் செதுக்கும்போது கிடைக்கும் உயிர், நம்மை பிரமிக்க வைக்கிறது. வாழ்க்கையும் அதுபோலத்தான்.

ஒருமுறை துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருந்த அந்த இளைஞரின் கை தவறுதலாக அங்கிருந்த ஆன்டிமணி வெடிஉப்பில் உரசியது. அடுத்த நிமிடம் ஒரு தீப்பிழம்பு வெளியானது. இதைப் பார்த்த இளைஞருக்குள் பொறி எழுந்தது.

இரு ரசாயனக் கலவையை தனித்தனியே எடுத்து ஒரு குச்சியால் ஒன்றைத் தோய்த்து மற்றொன்றின் மீது உரசினார். விளைவு தீ பிறந்தது. தீக்குச்சியும், தீப்பெட்டியும் கண்டுபிடிக்க அது தூண்டுகோலாக அமைந்தது.

தினமும் 24 மணிநேரத்தை நமக்கு இயற்கை வரப்பிரசாதமாக அளித்துள்ளது. இதில் 6 மணி நேரம் உறக்கத்துக்கு போகிறது. இப்படியே போனால் ஓராண்டுக்கு நாம் தூங்கிக் கழிப்பது 2190 மணித்துளிகள்.

இதை நாள்களாக மாற்றினோமானால் 96 நாள்களும் 6 மணிநேரம் தூக்கத்தில் கழிக்கிறோம். அப்படியானால் மீதமுள்ள 261 நாள்களில் நாம் செய்யும் செயல்கள் என்ன? அதில் நாம் பெற்றிருக்கும் பலன்கள் என்ன?.

ஏதோ உழைத்தோம். உண்டோம், உறங்கினோம் என்ற ரீதியில்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 70 என்கிறது மருத்துவம். அந்த எண்ணிக்கை இன்று குறைந்து வருகிறது.

இந்த வயதுக்குள் நீ சாதித்தது என்ன என்று உள்மனம் கேட்கும் போது நம்மை நாமே திட்டிக்கொள்கிறோம். ஆக நேரம் இருக்கிறது. அதை பயன்படுத்தத் தெம்பில்லை. தைரியமில்லை. ஆகவே தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். கிடைக்கும் நேரம் விலை மதிப்புமிக்கது என்ற உணர்வும், உண்மையும் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தால் வாழ்க்கையில் நாம் வெற்றிபெற்றவராகிறோம். எத்தனை கண்டுபிடிப்புகள், எத்தனை சாதனைகள் ஒவ்வொரு நிமிடமும் நிகழ்த்தப்படுகின்றன.

இந்த பொன்னான வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைக்க முடியும். அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி. நினைத்ததைச் சாதிக்க முடியும். ஆனால் அனைத்துக்கும் பொறுமை, விவேகம் வேண்டும்.

சனி, 30 மார்ச், 2013

சாதனை பெண்மணி நவநீதம்பிள்ளை



சாதனை பெண்மணி நவநீதம்பிள்ளை
1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் பிறந்த ஒரு தமிழரான நவநீதம் பிள்ளை ஓர் இந்திய வம்சாவளிப் பெண். தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததன் பிறகு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்துக்கு தேர்வுசெய்யப்பட்ட வெள்ளையினத்தவரல்லாத முதல் நீதிபதி என்ற பெருமைக்குரியவர்.
இவர் நிறவெறி மிகுந்த தென் ஆப்பிரிக்காவில், நீதிபதியாக உயர்ந்ததே மாபெரும் சாதனைதான். இப்போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளராக அகில உலகமும் வியப்புடன் பார்க்கும் உயரத்தில் ஜொலிக்கிறார்.
இந்த நீதி தேவதை. சமீபத்தில், தன் முன்னோர்கள் பிறந்த பூமியான இந்தியாவுக்கு வருகை புரிந்த நவநீதம் பிள்ளை, ஊடகங்களின் முக்கிய செய்தியானார்.

தன் வாழ்க்கை முழுதுமே பல வேதனைகளை சந்தித்த இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே தென் ஆப்பிரிக்காவில்தான். ஏழை குடும்பத்தில் ஒரு பேருந்து ஓட்டுநரின் மகளாகப் பிறந்த இவரை, உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வரை சென்று சட்டம் படிக்கச் செய்தது இவருடைய அம்மாதானாம்.
என் அம்மாவை என் தாத்தா பள்ளிக்கு அனுப்ப வில்லை, எழுத, படிக்க தெரிந்து விட்டால், என் அம்மா யாருக்காவது காதல் கடிதம் கொடுத்து விடுவாரோ என்கிற பயம்தான் காரணமாம். தனக்கு நேர்ந்த கொடுமை எங்கள் நால்வருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அம்மா மிகுந்த கவனத்துடன் இருந்தார். பெண்களுக்கு கல்வியும் சுதந்திரமும் அவசியம் என்று அவர் நம்பியதால்தான், இன்று நான் இப்படி ஒரு பதவியில் வந்து உட்கார்ந்திருக்கிறேன்! என்கிறபோது ஈரத்துடன் பளபளக்கின்றன அவர் விழிகள்!

1982ம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.
1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார். அப்போதே நிற வெறிக்கு எதிராக மிகுந்த உறுதியுடன் குரல் எழுப்பினார் நவநீதம் பிள்ளை. இதற்காக அப்போதைய தென் ஆப்பிரிக்காவை ஆண்ட வெள்ளையர்களால் இவர் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். ஒரு கட்டத்தில் இவருடைய பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது. அதற்கெல்லாம் அயர்ந்து விடாமல் சட்டத்தின் மூலமே தன்னைத் தற் காத்துக் கொண்டதோடு, நிற வெறியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு விடிவெள்ளியாகவும் விளங்கினார்.
நிற வெறிக்கு எதிராக 28 ஆண்டுகள் போராடினேன். சட்டக் கல்லூரியில் வெள்ளையர் அல்லாதவர்களுக்கான தனி வகுப்பறையில் படித்துத்தான் சட்டம் முடித்தேன்.
ஒரு வழக்குரைஞராக, நீதிமன்றத்தில் பிறரின் உரிமைகளுக்காக வாதாடிய சமயத்திலும்கூட, நான் வெள்ளையர்களில் ஒருத்தி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நீதிபதியின் அறைக்குள் நுழைகிற உரிமை எனக்குத் தரப்படவில்லை. ஆனால், அந்த வலிகளெல்லாம்தான் எனக்கு வலிமை தந்தது என்று தன் வாழ்நாளின் கறுப்புப் பக்கங்களை கசப்போடு திரும்பிப் பார்க்கிறார் நவநீதம் பிள்ளை.

தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்காவும் , இவரது கணவர் உட்பட தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் அவர் ஒரு பாதுகாவலராக கடமையாற்றியவர்.
1973 இல் நெல்சன் மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றார்.

1992இல் தன்னுடன் வேலை பார்த்த சக வழக் கறிஞர்கள் இருவர் துணையுடன் "இக்வாலிட்டி நவ்" என்ற பெண்களுக்கான மனித உரிமை அமைப்பை தோற்றுவித்து பெண்களின் நலனுக்காகவும் போராடி வருகிற இவர், கறுப்பு இன மக்களின் மனதில் எவரெஸ்ட்டாக உயர்ந்து நிற்கிறார்.

மனித உரிமை சட்டங்கள் பயின்றிருந்த அவர், 1995ல் தென்னாப்பிரிக்காவின் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதுவரை வெள்ளையினத்தவர் மட்டுமே வீற்றிருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் ஆசனத்தை அலங்கரித்த வெள்ளையரல்லாத முதல் ஆள் அவர்தான்.

ருவாண்டா இனப்படுகொலையை விசாரிப்பதற்காக டான்ஸானிவின் அருஷா நகரில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்டதிலிருந்து சர்வதேச அளவில் அவர் பங்காற்றத் துவங்கினார். நான்கு ஆண்டுகாலம் அப்பொறுப்பை வகித்த பின்னர் தி ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் நீதிபதியாக இருந்தார்.
2003 இல் இவருக்கு பெண்கள் உரிமைக்கான குரூபர் பரிசு வழங்கப்பட்டது.
பூகோள ரீதியாகவும் பாலியல் மற்றும் அனுபவ ரீதியாகவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் பொறுப்புக்கு இரு குழுக்களால் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த சாதனைக்குப் பின்னால் நிச்சயம் என் கணவர் பரஞ்ஜோதியின் பங்கு இருக்கிறது. அவரும் வழக்குரைஞர் தான். நிற வெறிக்கு எதிராக அவர் வாதாடியதால் ஐந்து மாதங் கள் சிறையில் தள்ளப்பட்டார். இப்போது அவர் உயிருடன் இல்லை என்றாலும் என் மனதிலும் நினைவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்று உணர்வுபூர்வமாக நினைவுகூர்கிறார் தன் கணவரை ஒரு காலத்தில் வெள்ளையர்கள் எங்களை பிளாக் பியூட்டி என்று அழைத்தனர். ஆனால், குதிரைகளைத் தான் அப்படி அழைப்பார்கள் என்று தெரிய வந்தபோது அந்த வார்த்தையையே நான் வெறுத்தேன். அப்படி, அவர்களின் ரத்தத்திலேயே கலந்திருக்கும் நிறவெறிக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இப்போது உள்ள குழந்தைகளுக்கு நிற வெறி என்றால் என்ன என்று கூட தெரியவில்லை. அது தான் எங்களின் வெற்றி… என்று கண்களை மூடி மெது வாக சிரிக்கிறார் நவநீதம்பிள்ளை
நீதி என்றும், யாருக்கும் மறுக்கப்படுவதில்லை என்று நம்புவோம்!

வியாழன், 28 மார்ச், 2013

உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!

உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!

உலகில் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் உயரவேண்டும், முன்னேற வேண்டும், வளர வேண்டும் என்று விரும்புகின்றனர்.

நீங்கள் முன்னேற, உயர, வளர விரும்பினால் உயர்ந்த குறிக்கோள் ஒன்றை வரையறுத்துக் கொண்டு, உழைக்கத் தயாராகி விடவேண்டும்.

ஆசை காரணமாக உயர்ந்த குறிக்கோளை வரையறுப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால், குறிக்கோளை நோக்கி உழைக்கத் துவங்கும் போது மலைப்பாகத் தோன்றும்.

மலைத்துப்போய் ஒதுக்கிவிடுவீர்களாயின் வாழ்க்கை முழுதும் ஆசைப்படுபராகவும், கனவு காண்பவராகவுமே கழிக்க வேண்டி நேரும்.

உங்கள் குறிக்கோளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முடியாது என்னும் எண்ணம் உடனே வந்து உங்களிடம் ஒட்டிக்கொள்ளும்.

முடியாது என்னும் எண்ணத்தைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளை, பகுதி பகுதியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். பிரித்து எண்ணிப் பார்த்தால் மலைப்போ, திகைப்போ தோன்றாது.

உங்களால் ஆயிரம் கி.மீ. நடக்க முடியுமா? என்று கேட்டால் முடியாது என்னும் பதிலை உடனே கூறி விடுவீர்கள். உங்களால் ஆயிரம் கி.மீ. தூரம் ஆயிரம் நாட்களில் நடக்க முடியுமா? என்று கேட்டால் ஏன் முடியாது? என்று உற்சாகமாக்க் கேட்பீர்கள்.

குறிக்கோளை அடைய முடியுமா? என்று ஒட்டுமொத்தமாக ஏன் சிந்திக்கிறீர்கள்? உயர்ந்த குறிக்கோள்களை பத்து ஆண்டுகளில் அடைந்தாலே மாபெரும் வெற்றிதான்.

பத்து ஆண்டுகளில் 120 மாதங்கள் உள்ளன. 3650 நாட்கள் உள்ளன. உங்கள் செயல்திட்டத்தை உருவாக்கும் போது குறிக்கோளை 10 ஆண்டுப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆண்டுப் பகுதியையும் 12 மாதப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதப் பகுதிகயையும் 30 நாட்பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

இப்போது எளிதாகத் தோன்றுகிறதா இல்லையா? ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படவில்லை, என்னும் பழமொழியைப் புரிந்து கொள்ளுங்கள்.

உலகம் பார்த்து வியக்கும் தாஜ்மகாலோ செங்கோட்டையோ பல ஆண்டுகள், பல மாதங்கள், பல்லாயிரம் நாட்கள் தொடர் உழைப்பில் உருவானவை தாமே!

பத்தடுக்கு மாளிகையேயாயினும் ஒவ்வொரு செங்கல்லாகவே அடிக்கப்படுகிறது. ஒவ்வொரு அடுக்காகவே உயர்ந்து மாளிகை ஆகிறது. ஆகவே, நீங்கள் எடுத்துக்கொண்ட குறிக்கோள் அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும். தொடர் முயற்சியும், விடா முயற்சியும் வெற்றி என்னும் பெருமையைத் தரும்.

இதை நீங்கள் புரிந்து கொண்டால் உழைப்பின் மேன்மையை உணர்ந்து செயல்படுவீர்கள். உழைப்பின் வாரா நன்மைகள் உள்ளனவா?

உழைப்பதற்கு அஞ்சுபவர்களைப் பாருங்கள் அவர்கள் இரண்டு வகையினர், ஒருவகையினர் வறுமையிலும், பற்றாக் குறையிலும் பரிதவித்துக் கொண்டிருப்பர். இன்னொரு வகையினர் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குள்ளநரிகளாக இருப்பர்.

முதல்வகையினர் சோம்பேறிகள், இரண்டாவது வகையினர் மோசடிப் பேர்வழிகள்.

சோம்பேறிகள் தங்கள் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள அதிர்ஷ்டத்தை நம்பி இருப்பார்கள். லாட்டரிச்சீட்டு, குதிரைப் பந்தயம், சீட்டாட்டம் போன்றவைகளில் ஈடுபட்டு, மேலும் கடன்பாட்டு மனிதப் பிறவியை மாசுபடுத்திக் கொள்வார்கள்.

குறுக்குவழியினர் திருட்டு, ஏமாற்று, வாட்டி வதைத்து வட்டி வாங்குதல், கலப்படம், கள்ளச்சந்தை, கொள்ளை, கொலை, கொள்கையில்லா அரசியல், இலஞ்சம், ஊழல் போன்ற கொடுஞ்செயல்களால் பணம் சேர்க்க முயல்பவர்கள். இவர்கள் சேர்க்கும் செல்வம் களவினால் ஆகிய ஆக்கம். அது அளவிறந்து ஆவது போலக் கெடும்.

இந்த இருவகையிலும் சேராதவரா நீங்கள்? நல்லது. இயற்கை தரும் தண்டைனைக்குத் தப்பி விட்டீர்கள்.

நீங்கள் செல்வம் சேர்க்க உழைப்பது நல்லது தான். ஆனால், இயற்கையுடன் முரண்பட்ட வழிகளில் முயன்றால், தற்காலிகமாக உயர்வது பொன்று தோற்றமளிப்பினும் முடிவு பரிதாபமாக இருக்கும்.

சட்டத்தின் பார்வையிலிருந்து ஒருவன் தப்பி விடலாம. இயற்கையின் பார்வையிலிருந்து எவரும் தப்ப முடியாது.

இயற்கை ஒழுங்கின்மையையோ, ஒழுங்கீனத்தையோ ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை. சரியான நேரத்தில், சரியான முறையில் இயற்கை தன் நியாயத்தீர்ப்பை நேர்த்தியாய் வழங்கிவிடும்.

நீங்கள் இயற்கையுடன் ஒன்றுபட்ட முறையில் உழைப்பீர்களானால் அதுவே உயர்வைத் தரும். ஊக்கமின்றிச் சோம்பி இருப்பீர்களானால் அதுவே தாழ்வே உருவெடுக்கும்.

இயற்கையுடன் ஒன்றுபடும் போது உங்கள் செயல் திட்டங்களில் உண்மையும், நேர்மையும் ஒளிரும். அப்போது இயற்கை அன்னை உங்கள் கரம் பிடித்து வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வான்.

இயற்கையின் உதவியோடு குறிக்கோளை அடைய செயல்திட்டத்தை வகுத்துவிட்டீர்கள். இனி தயக்கமோ, தாமதமோ இல்லாமல் முதல் அடியை எடுத்து வைத்து விடுங்கள். ஆயிரம் கிலே மீட்டர் பயணம் ஆயினும் அது ஓரடியில்தான் தொடங்குகிறது என்பது அற்புதமான மொழி.

வெற்றி கிடைக்குமா? என்று சந்தேகத்துடன் சிந்திக்க வேண்டாம். நான் நம்புவது நடந்தே தீரும் என்னும் எண்ணத்துடன் அடுத்த அடையை எடுத்து வையுங்கள்.

உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய சில உளவியல் சார்ந்த, அறிவியல் ரீதியான ஒரு செய்தியை அறிந்து கொள்ளுங்கள்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும், உயர வேண்டும், வளர வேண்டும், விரும்புவதை ( வெற்றி ) அடையவேண்டும் என்றே இயற்கை விரும்புகிறது. அதற்கேற்பவே மனிதனின் உடல் இயக்க விதிகளை இயற்றி வைத்திருக்கிறது.

ஒரு குழந்தையின் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்கினால் இந்த உண்மை தெளிவாகும்.

தாய் ஒரு குழந்தையைப் பெறுகிறாள். பிறந்தபின் அதைக் கையில் எடுத்துச் சீராட்டாமல் உயிர் வாழ்வத்ற்குரிய உணவை ( பாலை ) மட்டுமை புகட்டிவந்தால் போதும், குழந்தை அழுது, அலறி, பசியாறி, உறங்கி மீண்டும் அழுது… உயிர் வாழும்.

மூன்று மாதங்கள் இப்படியே தொடர்ந்தாலும் குழந்தை ஒருநாளில் குப்புற விழும். மீண்டும் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவை மட்டும் புகட்டிக்கொண்டே வந்தா அது தானே எழுந்து அமரும். தொடர்ந்து உணவூட்டி வந்தால் ஒரு நாள் தானே எழுந்து நிற்கும், விழும், அழும், ஆனாலும் அடங்கி இராமல் மீண்டும் எழுந்து நின்று தன் முதலடியை முன்னோக்கி எடுத்து வைக்கும்.

அதுமட்டுமின்றி உடல் மேல் நோக்கி வளரும். தன் சூழ்நிலையிலிருந்து அடைய முயற்சித்து வெற்றி பெறும்.

குழந்தையால் எப்படி முடிகிறது. இயற்கை, தான் இயற்றி வைத்துள்ள சட்டங்களின்படி அதனோடு ஒத்துழைக்கிறது.

ஆகவே, நீங்கள் வாழ்வில் உயரவேண்டும் என்பதும், முன்னேற வேண்டும் என்பதும், வளர வேண்டும் என்பதும், விரும்புவதை
( வெற்றி ) அடையவேண்டும் என்பதும் இயற்கைச் சட்டம். இயற்கையுடன் கரம் கோர்த்துக் கொண்டால். நீங்கள் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம். இயற்கையுடன் கரம் கோர்த்துக் கொள்ளவதா? எப்படி?

உங்கள் குறிக்கோள் என்ன? அதை நிறை வேற்றுவதற்கு நீங்கள் வரையறுத்துள்ள ஆண்டு எது? அதை அடைவதற்கு நீங்கள் தேர்வு செய்துள்ள தொழில், வணிகம் அல்லது விற்பனை எது?

அந்தத் தொழில், வணிகம் அல்லது விற்பனை தொடர்பான முதல் நடவடிக்கையை இன்றே, இப்பொழுதே தொடங்குங்கள். ஒத்தி வைக்காதீர்கள். தள்ளிப்போடாதீர்கள் அடுத்த நாளில் இன்னொரு நடவடிக்கை, மறுநாள் அது தொடர்பான மேலும் ஒரு நடவடிக்கை.

ஒரு வாரத்தில் பொருத்தமான ஏழு செயல்கள், முன்னேற்றத்தை நோக்கி, மாதத்தில் முப்பது செயல்கள், ஒரு ஆண்டில் முந்நூற்று அறுபத்தைந்து செயல்கள், ஒரு ஆண்டில் முற்நூற்று அறுபத்தைந்து செயல்கள்.

ஒரு ஆண்டு முழுவதும் நீங்கள் தொடர்ந்து செய்த செயல்கள் தொழிலாக, வணிகமாக, விற்பனை வாய்ப்பாக உருவாகி இருக்கும் முந்நூறு அறுபத்தைந்து செங்கற்கள் சேர்த்த ஒரு சுவராவது போன்று.

இப்படியாக வளர்ச்சியை நோக்கி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும், பல சுவர்களாக மாறி ஒன்றுக்கொன்று இணைந்து வெற்றி என்னும் மாளிகையாக மாறிவிடும்.

முயற்சியை நிறுத்தாமல் விடாமுயற்சி யாகவும் தொடர்முயற்சியாகவும் கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமனா இயற்கைச் சட்டம். தினமும் ஒரு சாதகமான நடவடிக்கை எடுக்கும் போது சட்டப்படி உங்களுக்கு வெற்றி உத்திரவாதம் ஆகிறது.

அதைவிடுத்து நேரம் கிடைக்கும் போதும், விருப்பம் ஏற்படும் போதும் மட்டும் உழைப்பது மற்ற நேரங்களில் சோம்பி இருப்பது, விட்டு விட்டு முயல்வது, ஏவராவது விரட்டினால் மட்டுமே உழைப்பது என்று நினைப்பவருக்கு வெற்றி எட்டாக் கனியாகும்.

வெற்றி செடி வேர்பிடித்து விட்டதா என்று பிடுங்கிப் பார்த்து நடவேண்டாம் உழைப்பு என்னும் நீரையும், நம்பிக்கை என்னும் உரத்தையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள்.

நாள்தோறும் ஒரு நடவடிக்கை என்னும் ஆலோசனையைத் தவறாமல் கடைப்பிடியுங்கள். கடைப்பிடிக்கும் போது இயற்கையின் கரத்தோடு உங்கள் கரம் இணைந்து விடுகிறது.

இணையும்போது இயற்கையின் கரத்திலுள்ள வெற்றி மாலை உங்கள் கழுத்திற்கு வந்துவிடுகிறது.

ஆகவே… அறிந்து கொள்ளுங்கள்.
`
வெற்றியின் ஒன்பதாவது இரகசியம்…

உழைப்பே உயர்வு,
உறக்கம் தாழ்வே!