செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

உனக்கு நீயே நண்பனும், பகைவனும்!


உனக்கு நீயே நண்பனும், பகைவனும்!

தியான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்வது மிக உயர்ந்த அறிவுரை. அது

தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னை எப்போதும் இழிவுபடுத்திக் கொள்ளக் கூடாது. தனக்குத் தானே நண்பன். தனக்குத் தானே பகைவன்.

தன்னை வசப்படுத்திக் கொண்டவனுக்கு தானே நண்பன். தன்னை வசப்படுத்திக் கொள்ளாதவனுக்கு தானே சத்ருவாகி தனக்குக் கேட்டை உண்டாக்கிக் கொள்கிறான்.

ஒவ்வொருவருக்கும் மிக உயர்ந்த நிலைக்குப் போக இயல்பாகவே ஆசை இருக்கிறது. ஆனால் பெரும்பாலானோரும் அதை யாராவது தங்களுக்காக செய்து தர ஆசைப்படுகிறார்கள்.

கடவுளோ, குருவோ, தலைவனோ, நண்பனோ, அல்லது வேறு யாராவது செய்து தந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகிறார்கள்.

இப்படி உயர்ந்த நிலைக்குப் போகும் பொறுப்பை அடுத்தவர் தலையில் கட்டுவது ஒருவர் தாழ்ந்த நிலையிலேயே தங்கி விடுவதற்கு நிரந்தரக் காரணமாகி விடுகிறது.

எனவே தான் தன்னை உயர்த்திக் கொள்ளும் பொறுப்பு அவரவருக்கே உள்ளது என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

நான் பலவீனமானவன், சக்தியற்றவன், என்னால் இதெல்லாம் முடியாது, அதெல்லாம் முடியாது என்பதெல்லாம் தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்ளும் வழிகள். தன்னைக் குறைத்துக் கொண்டு யாரும் உயர முடியாது என்பதால் அதை எப்போதும் செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்.

ஒரு சிறு விதை நான் எப்படி பெரிய மரமாகப் போகிறேன் என்று தன்னை இழிவாக நினைத்துக் கொள்வதில் அர்த்தமில்லை.

அது தளிராகி, செடியாகி, மரமாகத் தேவையான எல்லாமே காலா காலங்களில் கிடைக்கும். கிடைப்பதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அது தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். அது தான் முறை. அது தான் இயற்கையான வளர்ச்சி. அது தன் ஆரம்ப நிலையில் தாழ்வு மனப்பான்மை கொண்டு தன்னை இழிவாக நினைத்துக் கொண்டு வருத்தத்தில் இருந்து விட்டால் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு உயரும் நம்பிக்கையையும், தெம்பையும் இழந்து விட்டு அழிந்து தான் போகும்.

இது மனிதனுக்கும் முற்றிலும் பொருந்தும். இலக்கை அடையும் ஆவலை இயற்கையாகவே அவனிடம் ஏற்படுத்திய இறைவன் அதை நிறைவேற்றிக் கொள்ளும் சக்தியையும், சந்தர்ப்பங்களையும் அவனுக்கு ஏற்படுத்தித் தராமல் இல்லை. எது நல்லது எது கெட்டது என்றும், இலக்கை அடைய எது தேவை, எது தேவையில்லை என்றும் பகுத்தறியும் அறிவும் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அப்படி இருந்தும் அவன் அதற்கேற்றாற் போல தன் மனதும், நடவடிக்கைகளும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளா விட்டால் அவன் தன்வசமில்லை என்று பொருள். உயர வேண்டும் என்ற நோக்கமும் இருந்து, அதற்கான வழியும் தெரிந்து,

அதன் படி அவனால் நடக்க முடியவில்லை என்பதால் அவனுக்கு அவனே பகைவன் ஆகி விடுகிறான். அதனால் அவன் இலக்கு ஒரு கற்பனையாகவே இருந்து விடும். அது மட்டுமல்ல ஆரம்பித்த இடத்தில் கூட நிற்க முடியாமல் தன் முட்டாள்தனமான செயல்களால் அதல பாதாளத்திற்குத் தள்ளப்படுகிறான்.

இது அவன் அவன் தவறுகளுக்கான தண்டனை இல்லை. யாரோ எங்கோ அமர்ந்து தீர்ப்பு வழங்குவதில்லை. தண்டிப்பதில்லை.

சுவாமி ராமதீர்த்தர் மிக அழகாகச் சொல்வார். “மனிதன் தவறுகளாலேயே தண்டிக்கப்படுகிறான். தவறுகளுக்காகத் தண்டிக்கப் படுக்கப்படுவதில்லை”.

இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் கடலளவு பெரிது. அந்தத் தவறுகள் தங்கள் இயல்பான விளைவுகளிலேயே வந்து முடிகிறது. அது தண்டனையாகத் தோன்றினாலும் மனிதனை வேறு யாரும் தண்டிப்பதில்லை. அவன் தன் செயல்களால் தன்னையே தண்டித்துக் கொள்கிறான் என்பதே உண்மை.

உயர வேண்டும், இலக்கை அடைய வேண்டும் என்று நோக்கம் இருந்து அதற்கான வழிகளை அறிந்து அதற்கேற்றாற் போல் தன் வாழ்வின் ஒவ்வொரு கணமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் மனிதன் வழிமாறிப் பயணிப்பதில்லை.

தேவையற்றவற்றில் ஈடுபட்டு அவசியமானவற்றை புறக்கணித்து விடுவதில்லை. எது அவன் முன்னேற்றத்திற்கு உதவாதோ அதை ஆரம்பத்திலேயே தள்ளி விட்டு அவசியங்களில் மட்டும் மனதை நிறுத்தி செயல்களும் அது சார்ந்தே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறான். அவன் தன்னை வசப்படுத்திக் கொண்டவன். அதனால் அவன் தனக்கு நண்பனாகவே செயல்படுகிறான். அவன் உயரவும் செய்கிறான்.

எனவே தான் ஸ்ரீகிருஷ்ணர் தனக்குத் தானே நண்பன் என்றும் தனக்குத் தானே பகைவன் என்றும் உறுதியாகக் கூறுகிறார். எனவே நாம் காரணங்களை வெளியே தேட வேண்டியதில்லை.

புறநானூறும் மிக அழகாகச் சொல்கிறது. “தீதும் நன்றும் பிறர் தர வாரா”. எனவே லௌகீகம் ஆகட்டும், ஆன்மிகம் ஆகட்டும், வெற்றி பெறவும், கடைத் தேறவும் மனிதன் முதலில் தன்னையே சரி செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அவன் சரியானால் பின் அவனுக்கு உலகமே சரியாகி விடும்.

வியாழன், 21 பிப்ரவரி, 2013

அலட்சியத்தின் விலை அதிகம்

அலட்சியத்தின் விலை அதிகம்

அலட்சியம் என்றும் எதையும் சாதித்ததில்லை. 

அது மாபெரும் நூல்களை எழுதியதில்லை. மனதை மயக்கும் இசையை இசைத்ததில்லை. உயர்ந்த ஓவியங்களை வரைந்ததில்லை. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்ததில்லை. நாலு பேருக்கு நன்மை பயக்கும் செயல்களைச் செய்ததில்லை. வீரதீர பராக்கிரமங்களை நிகழ்த்தியதில்லை. மேன்மைக்குரிய இந்த செயல்கள் எல்லாம் உற்சாகத்தினாலும், ஊக்கத்தாலும் இதயபூர்வமாக செய்யப்பட்டவை. லட்சியத்தின் வெளிப்பாடுகள்.

அலட்சியம் எதையும் முக்கியம் என்று நினைப்பதில்லை. புதியதாக முயற்சிகள் எடுப்பதில்லை. எதிலும் சீரிய கவனம் வைப்பதில்லை. எண்ணங்களையும், செயல்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்வதில்லை. திட்டமிடுவதிலை. கஷ்டப்பட்டு உழைக்கத் தயாராவதில்லை. குறிக்கோள் வைத்துக் கொள்வதில்லை. உற்சாகம் கொள்வதில்லை. ஆனால் சாதனைகளும் சரித்திரங்களும் இதற்கு எதிர்மறையான குணங்களினாலாயே சாத்தியமாகின்றன.

ஒரு வயல்வெளியைப் பாருங்கள். உழுது, பயிரிட்டு, கதிர்கள் அரும்பி நிற்கும் அந்த அழகுக் காட்சி ஒரு லட்சியத்தின் விளைவு. அதில் ஒரு திட்டமுண்டு. காலம் பார்த்து முறைப்படி செய்த உழைப்புண்டு. அதில் ஒரு பயனுண்டு. அந்த வயல்நிலம் இலட்சியத்தின் விளைவு.

முள்களும், பார்த்தீனியமும், சகட்டுமேனிக்கு வளர்ந்து ப்ளாஸ்டிக் காகிதங்கள் சிக்கிக் கொண்டு இருக்கும் ஒரு கண்காணிக்கப்படாத நிலத்தைப் பாருங்கள். அதில் குறிக்கோளும் இல்லை. எந்த மனித முயற்சியும் இல்லை. எல்லாம் தானாக வளர்ந்தது. தானாக வந்து சிக்கியது. அதனால் எந்தப் பயனும் இல்லை. அந்தப் பாழ்நிலம் அலட்சியத்தின் விளைவு.

எது எக்கேடோ கெட்டுப் போனால் எனக்கென்ன என்பது அலட்சியம். தானாக எது நடந்தாலும் சரி என்று இருப்பது அலட்சியம். முக்கியமான முடிவுகளைத் தானாக எடுக்காமல் இருப்பது அலட்சியம். போகின்ற வழி எது என்று அறியாதிருப்பது அலட்சியம். தன் வாழ்க்கைக்குத் தானே பொறுப்பு எடுக்காமல் இருப்பது அலட்சியம்.

எதையும் லட்சியம் செய்யாமல் வாழ்பவர்கள் யாரும் லட்சியம் செய்யாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். வாழ்க்கையின் உண்மையான சந்தோஷத்தை அறியாமலேயே, வாழ்ந்த சுவடு தெரியாமலேயே மறைந்து போவார்கள். வாழ்க்கையில் முக்கியமான அம்சங்களில் காட்டும் அலட்சியத்திற்கு மனிதர்கள் தரும் விலை மிக அதிகம்.

'அன்னியன்' திரைப்படத்தில் சமூக அலட்சியம் பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். அந்தப் படத்தின் கதாநாயகன் அலட்சியக்காரர்கள் ஒவ்வொருவரையும் கருட புராணத்தில் சொல்லியிருக்கும் சித்திரவதைக்கு உள்ளாக்குவான். அது கற்பனை. அது போல மனிதன் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அலட்சியமாக இருந்து விட்டால் வேறு ஒரு நபர் வந்து தண்டிப்பதில்லை. மோசமான விளைவுகளை சந்தித்து தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறான். எனவே வாழ்க்கையில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

திங்கள், 11 பிப்ரவரி, 2013

வாழ்க்கையில் ஒரு சவால்

வாழ்க்கையில் ஒரு சவால்...

சிலர் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் பிறப்பதே அதற்காகத் தான் என்று நம்புகிறார்கள். சிலரோ வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் அது தான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று சிந்திக்கிறார்கள். இதில் எது சரி என்ற கேள்விக்கு சரியான விடையை அவரவர் மனநிலைக்குத் தகுந்தபடி நாம் எடுத்துக் கொள்கிறோம்.

இந்தக் கேள்விக்கு அழகான பதில் ஒன்று சமீபத்தில் நான் படித்த நாவலில் எனக்குக் கிடைத்தது. அந்த நாவல் Paulo Coelho எழுதிய The Alchemist.

அந்த நாவலில் கதாநாயகன் தன் பிரயாணத்தின் வழியில் உள்ள ஒரு ஊரில் ஒரு சித்தரைப் போன்ற மனிதரைச் சந்திக்கிறான். அந்த மனிதர் ஒரு டீ ஸ்பூனை அவனிடம் கொடுத்து அதில் இரண்டு சொட்டு எண்ணையையும் ஊற்றி அந்த எண்ணெய் சிந்தி விடாதபடி அந்த ஸ்பூனை எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரச் சொன்னார். கதாநாயகன் அப்படியே கவனமாக அந்த ஸ்பூனுடன் சென்று ஊரைச் சுற்றி வருகிறான்.

அவர் அந்த ஸ்பூனில் எண்ணெய் அப்படியே இருப்பதைப் பார்த்து விட்டு அவனிடம் ஊரில் உள்ள அழகான சில இடங்களின் பேரைச் சொல்லி அதையெல்லாம் ரசித்துப் பார்த்தாயா என்று கேட்கிறார். கதாநாயகன் தன்னால் அதையெல்லாம் சரியாகப் பார்க்க முடியவில்லை என்றும் தன் கவனமெல்லாம் எண்ணெய் சிந்தி விடாமல் இருக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது என்றும் சொல்கிறான்.

அந்த மனிதர் திரும்பவும் அந்த ஸ்பூனுடன் சென்று அந்த இடங்களை எல்லாம் நன்றாகக் கண்டு களித்து வரச் சொல்கிறார். அவனும் சென்று அவர் சொன்ன இடங்களை எல்லாம் நன்றாக ரசித்து விட்டு வருகிறான். உற்சாகமாகத் தான் கண்டு களித்த இடங்களின் அழகை வர்ணிக்கிறான்.

அதையெல்லாம் கேட்டு விட்டு அந்தப் பெரியவர் அமைதியாகக் கேட்கிறார். "சரி நான் கொடுத்த எண்ணெய் எங்கே?"

அப்போது தான் அந்த ஸ்பூனில் எண்ணெய் இல்லாததை அவன் கவனிக்கிறான்.

அந்த மனிதர் அந்தக் கதாநாயகனுக்குச் சொல்லும் அறிவுரை பொருள் பொதிந்தது.

"Well, there is only one piece of advice I can give you," said the wisest of wise men. "The secret of happiness is to see all the marvels of the world, and never to forget the drops of oil on the spoon".

அந்த மனிதர் அந்த நாவலின் கதாநாயகனை அனுப்பியது போல் தான் கடவுளும் நமக்கு ஏதாவது ஒரு குறிக்கோள் என்ற எண்ணெயைக் கொடுத்து வாழ்க்கையை நன்றாக அனுபவித்தும் வர இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பியிருக்கிறார். இந்த இரண்டில் ஒன்று நிறைவேறா விட்டாலும் நாம் உண்மையான சந்தோஷத்தையும் நிறைவையும் இந்த வாழ்க்கையில் பெற முடியாது. நல்லபடியாக வாழ்க்கையை ரசித்து வாழ்வோம். அதே நேரத்தில் அர்த்தமுள்ள குறிக்கோளில் இருந்து நமது கவனம் எந்தக் கணத்திலும் சிதறி விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வோம்.

இனியொரு வாழ்க்கை நமக்கு இருக்குமா, இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று நமக்கு நிச்சயமில்லை. ஆகவே கிடைத்த இந்த வாழ்க்கையில் அர்த்தத்தையும், ஆனந்தத்தையும் இழந்து விடாமல் பார்த்துக் கொள்வோம்.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

நீரின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது உலகு - இயற்கையை பாதுகாத்து வந்த தமிழன். இன்றைய நிலை என்ன ?

தண்ணீரில் இருக்கும் கனிமங்களின் அளவை டி.டி.எஸ். (Total dissolved solids) என்பார்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 300 புள்ளிகளுக்குள் இருந்தால் மட்டுமே அது குடிக்க உகந்த நீர். ஆனால், இன்று தமிழகத் தின் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 3,000-தைத் தாண்டிவிட்டது'' - சமீபத்தில் 'பூவுலகின் நண்பர்கள்அமைப்பினர் மற்றும் லயோலா கல்லூரியின் என்விரோ கிளப் இணைந்து 'முந்நீர் விழவுஎன்ற பெயரில் நடத்திய தண்ணீர்பற்றிய பண்பாட்டு, அரசியல் கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அதிர்ச்சிப் புள்ளிவிவரம் இது.

ஆற்று நீர், கடல் நீர், குடிநீர் - இந்த மூன்றுவிதத் தண்ணீரின் வளத்தையும் வணிக நோக்கில் மனிதன் எவ்வாறு எல்லாம் சூறை யாடுகிறான் என்பதைப் பற்றி அந்த நிகழ்ச்சி யில் பகிர்ந்துகொள்ளப்பட்ட பல தகவல்கள் பகீர் திகீர் ரகம்.

கடல் நீரின் மாசு குறித்து ஆவேசமும் ஆதங்கமுமாக விவரித்தார் பேராசிரியர் லால்மோகன். ''கருங்கடல், காஸ்பியன் கடல் போன்றவை அடர்த்தி மிகுந்தவை. அங்கு உயிரினங்கள் மிகக் குறைவு. அதில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அந்தக் கடல் சார்ந்த தேசத்தினர் சாப்பிடுவது கிடையாது. அந்த கடல்களின் நிலை மற்ற கடல்களுக்கும் வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஆறு லட்சம் டன் பெட்ரோல் கடலில் சிந்தி இருக்கிறது. டன் கணக்கில் நிலக்கரியும் ஆலைக் கழிவு நீரும் பிளாஸ்டிக் கழிவுகளும் கடலில் கலக்கின்றன. அணு மின் நிலையங்கள் வெளியேற்றும் வெப்பக் கழிவு நீரால் கடலின் அந்தப் பகுதியில் இருந்து மீன்கள் வெளியேறிவிடும். மீன்கள் வெளியேறினால் மீனவனும் வெளி யேற வேண்டியதுதான். இன்று இந்தியா ஆண்டு ஒன்றுக்கு நான்கு மில்லியன் மெட்ரிக் டன் கடல் உணவை அறுவடை செய்கிறது. முந்தைய அளவை ஒப்பிட்டால், இது பாதி தான். உற்பத்தியின் அளவு மட்டும் அல்ல... இன்று மீனவர்கள் பிடிக்கும் வஞ்சிரம், சுறா, சாளை, சங்கரா போன்ற மீன்களின் உருவ அளவும் பாதியாகக் குறைந்துவிட்டது!'' என்றார்.

கடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு, கடலுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பந்தத்தை விளக்கினார். ''கன்னியாகுமரி கடல் பகுதியை லட்சத்தீவு கடல் என்கிறார் கள். உண்மையில் அதை குமரிக் கடல் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில், கன்னியாகுமரி கடலில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழிந்துபோன சங்கத் தமிழ் நகரங்களின் எச்சங்களும் மலைத் தொடர்களும் மூழ்கிக்கிடக்கின்றன. இந்த இடிபாட்டுப் பகுதிகள் சுறாக்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்தவை. கடலில் உள்ள நீரோட்டங்களை நன்கு அறிந்தவை ஆமை கள். செயற்கைக்கோள் உதவியுடன் ஆமை களை ஆராய்ந்ததில் ஓர் உண்மை தெரிந்தது. ஆமைகள் தமிழகக் கடலில் பாயும் நீரோட் டங்களின் வழியே நீந்தாமல் மிதந்து சென்றே பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து பல்வேறு நாடுகளைச் சென்றடைகின்றன. இது இன்று, நேற்று நடப்பதல்ல. 65 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசருக்கு இணையான மூதாதையரான இந்த ஆமை கள், காலம் காலமாக இப்படித்தான் கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களை முட்டையிட தேடிச் செல்கின்றன. ஆமைகள் அப்படிச் செல்லும்போது அதனைப் பின் தொடர்ந்து சென்று கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண்டுபிடித்து தொழிலை யும் நாகரிகத்தையும் உலகில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே. இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. உலகெங்கும் உள்ள ஊர்களில் தமிழ் வாசம் வீசுகிறது. அவை எல்லாம் தமிழர்கள் ஆமையைப் பின்பற்றிச் சென்று கடல் வழி நீரோட்டப் பயணங்கள் மூலம் நிலங்களைக் கண்டடைந்ததன் விளைவுகள். ஆனால், இன்று அந்த ஆமைகளைப் பெருமளவு அழித்துவிட்டோம். கடலின் நீரோட்டங் களில் பல்வேறு வண்ணங்களில் அடித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை ஜெல்லி மீன்கள் என்று நினைத்துச் சாப்பிடும் ஆமைகள் இறந்துபோகின்றன.

சென்னையில் அடையாறு, கூவம், முட்டுக்காடு, எண்ணூர் உட்பட தமிழகத்தில் 33 முகத்துவாரங்கள் இருக்கின்றன. இவைதான் சுனாமியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் மிகப் பெரிய அரண்கள். இந்த முகத்துவாரங்கள் வேகமாக வரும் கடல் நீரை உள்வாங்கி அலைகளைச் சாந்தப்படுத்தி மீண்டும் கடலுக்குள் கொண்டுசென்றுவிடுகின்ற பணியைச் செய்கின்றன. ஆனால், இன்று அத்தனை முகத்துவாரங்களையும் சேதப்படுத்திவிட்டு, கற்களைக் கொட்டி கடல் அலையைத் தடுக்க முற்படுகிறோம். கல்லைக் கொட்டி எல்லாம் கடல் அலைகளைத் தணிக்க முடியாது!'' என்று முடித்தார்.

ஆற்று நீரைப் பற்றி பேராசிரியர் ஜனகராஜன் சொல்லும் தகவல் அதிர்ச்சியின் உச்சம். ''தமிழகத்தில் காவிரி, பாலாறு, வைகை உட்பட 17 நீர்ப் பிடிப்புப் பகுதிகள் இருக்கின்றன. இவை இல்லையெனில், தமிழகம் பாலையாகிவிடும். ஆனால், காவிரி தொடங்கி பாலாறு வரை தோல் தொழிற்சாலைகள், சாயப் பட்டறைத் தொழிற்சாலைகள் ஆற்றை விஷமாக்கி வருகின்றன. பாலாற்றங்கரையில் மட்டும் சுமார் 800 தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவை வெளியிடும் குரோமியம் கழிவு நீர் கலந்த குடிநீரைத்தான் சென்னையின் பாதி மக்கள் குடிக்கிறார்கள். பாலாறு பகுதியில் இருக்கும் 46 ஊர்களில் 27,800 கிணறுகளின் தண்ணீரை உபயோகிக்கவே முடியவில்லை. கிணற்றை எட்டிப் பார்த்தாலே ரசாயன நெடி தாக்குகிறது. உலகிலேயே மிகவும் மாசு பட்ட நதி என்று குளோபல் மேப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பது பாலாறு மட்டுமே. இதை நம்ப மறுப்பவர்கள் பாலாற்றின் வறண்ட பகுதியைப் போய்ப் பாருங்கள். நமக்குச் சோறிட்ட அந்தத் தாயின் உடல் முழுவதும் நீலம் நீலமாக ரசாயனத்தால் பூத்துக்கிடக்கிறது.

தோல் தொழிற்சாலைகளால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி வருகிறது என்கிறது அரசு. உண்மைதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அவ்வளவு தோல் பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன. ஏன்? அமெரிக்கா, ஐரோப்பாவில் கால் நடைகள் இல்லையா? அந்த நாடுகளுக்குத் தோல் பொருட்களைத் தயாரிக்கத் தெரியாதா? தெரியும். ஆனால், செய்ய மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை இது டர்ட்டி இண்டஸ்ட்ரி!'' என்கிறார் கோபத்துடன்!

குடிநீரைப் பற்றிப் பேசிய பேராசிரியர் சரவண பாபு கூறியது கவனிக்கத்தக்கது. ''15 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீரை எடுக்க நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. மினரல் வாட்டர் நிறுவனங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை நாள் ஒன்றுக்குக் குறிப்பிட்ட அளவு மட்டுமே நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க முடியும். தவிர, தனியாக இன்னொரு போர்வெல் போட்டு மழை நீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட தீங்கு இல்லாத நீரைச் சேகரித்து மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் போர்வெல் போட வேண்டும் என்றால், அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அந்தச் சட்டம் காலப்போக்கில் நீர்த்துவிட்டது. மினரல் வாட்டர் நிறுவனங்கள் தாங்கள் குறிப்பிட்ட அளவு தண்ணீரை பூமிக்குள் மீண்டும் செலுத்து வதாகச் சொல்கின்றன. உண்மையில், சுத்திகரிக்கப் பட்ட பின்பு கிடைக்கும் கழிவு நீரைத்தான் அவை பூமிக்குள் செலுத்துகின்றன. அதில்தான் டி.டி.எஸ். அளவு இன்னும் மிக அதிகமாக இருக்கும்.

நாம் குடிக்கும் ஒரு லிட்டர் குடிநீரில் நைட்ரேட் 20 மில்லி கிராம், துத்தநாகம், ஃப்ளோரைடு தலா ஒரு மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம் அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், இன்று தமிழகத்தில் பரவலாக நாம் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீரில் மேற்கண்ட அளவைவிட மூன்று மடங்கு கூடுதலாக ரசாயனக் கனிமங்கள் இருக்கின்றன. இதனால் சுவாச நோய், மன நோய், ரத்த சோகை, பற்களில் கறை, எலும்பு நோய்கள், சிறுநீரகக் கற்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடனடியாக தமிழகம் சுதாரிக்க வேண்டிய சூழல் இது!'' என்று எச்சரித்தார்.

இயற்கை விவசாயத்தில் மாற்றுப் பாதையை முன்னெடுக்கும் பாமயன் இறுதியாகக் கூறியது முத்தாய்ப்பான உண்மை. ''பூமியை ஓர் உயிரினம் என்பார்கள். செயற்கைக்கோளில் இருந்து பார்த்தால், பூமி மூச்சுவிட்டுக்கொண்டு மெலிதாக அசைவதுபோலத் தெரியும். அந்த உயிரினம் வேகமாகக் கொலை செய்யப்பட்டுவருகிறது. இதற்கு மேலும் அதை அழிக்க முற்படாதீர் கள். மீறினால் அந்த உயிரினம் மனித குலத்தை அழித்துவிடும்!''
Top of Form

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

ஒழுக்கம் அவசியமா?


ஒழுக்கம் அவசியமா?

ஒழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த கிழடுகள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக பல இளைஞர்கள் நினைக்கிறார்கள்.

வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஒழுக்கத்திற்கு தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் தந்து விடுகிறோமா? விடைக்கு ஒரு கதை...

கதிர் ஒரு கட்டிளங்காளை. மிகவும் ஒழுக்கமானவன். எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடுடையவன். தன் உடலை உடற்பயிற்சிகளாலும், யோகாசனங்களாலும் நன்கு பாதுகாக்கிறவன். அவன் ஒரு முறை தங்கள் யோகா வகுப்பினர் நடத்தும் ஒரு சொற்பொழிவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க ஒரு புகழ்பெற்ற மருத்துவரைக் காணச் சென்றான். அந்த மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரைக் காண அவன் காத்திருந்தான்.

அப்போது அந்த மருத்துவமனைக்கு தள்ளாத வயதுடைய முதியவர் ஒருவர் நுழையக் கண்டான். அந்த வயதிலும் அந்த முதியவர் கைத்தடி எதுவும் இல்லாமல் மருத்துவமனைக்கு தனியாக வந்தது அவனுக்கு வியப்பை அளித்தது. அவர் அவனருகே அமர்ந்தார். மருத்துவரைப் பார்க்க நேரம் அதிகமானதால் பொழுதைப் போக்க இருவரும் பேசிக்கொண்டார்கள்.

அந்த முதியவர் அவனிடம் ஒரு கட்டத்தில் கேட்டார். "நீ புகை பிடிப்பதுண்டா?"

கதிர் பெருமையாகச் சொன்னான். "இல்லை"

அவர் சொன்னார். "நான் தினமும் மூன்று பேக்கட் சிகரெட்டுகள் புகைப்பேன். பன்னிரண்டாம் வயதில் ஆரம்பித்த பழக்கம் அது. நீ மது குடிப்பதுண்டா?"

கதிர் சொன்னான். "இல்லை"

அவர் பெருமையாகச் சொன்னார். "நான் பதினாறாம் வயது முதல் மது குடிக்கிறேன். தற்போது தினந்தோறும் இரண்டு முறை இரண்டு புட்டி மதுவைக் காலையிலும், இரவிலும் குடிப்பேன்."

கதிருக்கு வியப்பாக இருந்தது.

முதியவருடன் பேசிக் கொண்டே போனதில் அவருக்கு இல்லாத தீயபழக்கங்கள் இல்லை என்று கதிருக்குத் தெரிந்தது. முதியவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்து விட வேண்டும் என்ற வெறியுடன் இருப்பவராகத் தெரிந்தார். எதிலும் எப்போதும் கட்டுப்பாடில்லாமல் அனுபவித்து இத்தனை வருடங்கள் வாழ்ந்த அவர் அவனை ஆச்சரியப்படுத்தினார். ஒவ்வொன்றிலும் கட்டுப்பாடோடு வாழ்ந்ததன் மூலம் நிறைய இழந்து விட்டோமா என்று கூட கதிருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

"இப்போது எதற்காக மருத்துவரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?" என்று கதிர் கேட்டான்.

சில நாட்களாக மூச்சுத் திணறல், நரம்புத்தளர்ச்சி, பலவீனம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியவர் கூறினார். இந்த வயதில் இது பெரிய விஷயமல்ல என்று நினைத்த கதிர் ஆவலுடன் அவர் வயதைக் கேட்டான்.

அவர் சொன்னார். "27"

இவ்வளவு நேரம் தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் முதியவரே அல்ல, இளைஞர் தான் என்று தெரிந்த கதிர் அதிர்ச்சி அடைந்தான். இது தான் ஒழுக்கமில்லாத வாழ்க்கையின் முடிவு.

திருவள்ளுவர் ஒழுக்கத்தின் அவசியத்தை ரத்தினச் சுருக்கமாக பல குறள்களில் கூறியுள்ளார். அவற்றுள் சில-

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
(ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கம் உயிரையும் விடச் சிறந்ததாகப் போற்றப்படும்)

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும்.
(நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத் தரும்)

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அ·தே துணை.
(ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெரிந்தாலும் உண்மையில் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக நிற்கும்)

இந்தக் குறள்களின் கருத்துகளுக்கு எத்தனையோ உயிருள்ள உதாரணங்களை இன்றும் நம்மால் பார்க்க முடியும். எத்தனையோ அறிவாளிகள், புத்திசாலிகள் கூட ஒழுக்கம் என்ற ஒரு விஷயத்தில் தவறி விட்டு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையையே கோட்டை விட்டு நிற்பதை நம்மால் காண முடியும். அவர்களை விடக் குறைந்த அறிவிருந்தாலும், குறைந்த கல்வியே பெற்றிருந்தாலும் ஒழுக்கமாக இருப்பவர்கள் எத்தனையோ நிம்மதியாகவும், நிறைவாகவும் வாழ்வதையும் நாம் காணலாம்.

ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் முடிவில் அது பெரிய பாதுகாப்பு வளையமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே போல் ஒழுக்கமின்மை ஆரம்பத்தில் கிளர்ச்சிகளைத் தரலாம். கடைசியில் அது எத்தனையோ பிரச்னைகளுக்கு வேராக நின்று துன்புறுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.

ஒழுக்கமான வாழ்க்கை ஏதோ உப்புசப்பில்லாத வாழ்க்கை என்பது போல் சிலர் உருவகப்படுத்தி விடுகிறார்கள். அதில் சிறிதும் உண்மை இல்லை.

ஒழுக்கமான வாழ்க்கையில் உண்மையான ஆனந்தத்திற்குக் குறைவில்லை. நல்ல வழியிலேயே இங்கு ஆனந்தம் ஏராளமாக இருக்கிறது. நல்ல இசையிலும், நல்ல புத்தகத்திலும், நல்ல வாழ்க்கைத் துணையிலும் கிடைக்காத ஆனந்தமா புகையிலும், மதுவிலும், தவறான உடலுறவிலும் கிடைத்து விடப்போகிறது? அழகான இயற்கைக் காட்சிகளிலும், மழலைகளின் பேச்சுகளிலும் கிடைக்காத மகிழ்ச்சியா போதையில் கிடைத்து விடப்போகிறது?

மேலும் நல்ல வழிகளில் கிடைக்கும் ஆனந்தம் முடிவில் மனிதனை உயர்த்தி விடுகிறது. தீய வழிகளில் கிடைக்கும் கிளர்ச்சிகள் கடைசியில் மனிதனின் தரத்தை தாழ்த்தி விடுகிறது. இன்னொரு உண்மை என்னவென்றால் ஒழுக்கமாக வாழ்பவன் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தாரையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் கூட நிறைவாக இருக்க விடுகிறான். அதே சமயம் ஒழுக்கமில்லாதவன் தன் குடும்பத்தினருக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறான்.

நம்மையும் உயர்த்தி, நம்மைச் சார்ந்தவர்களையும் நிம்மதியாக இருக்க விடும் ஒழுக்கம் மேன்மையா? இல்லை நம்மை சீரழித்து, நம்மைச் சேர்ந்தவர்களைத் துயரத்தில் ஆழ்த்தும் ஒழுக்கமில்லாத வாழ்க்கை தேவையா?

சிந்தித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள். ஒழுக்கம் அவசியமா? இல்லையா?

படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?


படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி? தேர்வுகளில் வெற்ற பெறுவது எப்படி?

இவைகள் பற்றிய குறிப்புகள் ஏராளம் உண்டு. இவையாவும் மென்பொருள் வன்பொருள் சம்பந்தப்பட்டவை. நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு செயல்பட சில குறிப்புகள்.

மாணவர்கள் தேர்வு நடக்கும் காலங்களில் வழக்கத்திற்கு மாறான மனநிலையில் இருப்பார்கள். எப்போதையும் விட அதிக அன இறுக்கம், குறைவான தூக்கம், அதிக நேரம் படிப்பு என்று ஒருவிதபோராட்ட சூழ்நிலையில் பதட்டத்தோடு காணப்படுவார்கள்.

உண்ணக்கூடாதது :

இப்படி குறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத் தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக உணவை, கடின உணவை உண்ணும் போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது. எனவே, எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது. காரம், மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி, தோசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்பட வேண்டும்

எடுத்துக்கொள்ள வேண்டியவை :

காலையில் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி இவற்றின் சாறுகளில் தேன் கலந்து குடிக்கலாம். அதன்பின் சத்துமாவு, கஞ்சி, ஓட்ஸ், கம்பு, ராகி, கோதுமை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றின் கஞ்சியை அருந்தலாம். மதியம் பருப்பு, கீரை இவற்றை வேகவைத்து கடைந்து சாதத்துடன் சேர்த்து உண்ணலாம். இரவு வேளை வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் பழங்களின் கலவையை (சாலட்) உண்ணலாம். படிக்கும் வேளைகளில் தேவைப்பட்டால் உலர் திராட்சை எடுத்துக்கொள்ளலாம். பேரீச்சம்பழம், பாதாம் பருப்பின் பொடியும் கலந்து உண்ணலாம். இவைகள் எளிதாக செரிமானம் ஆகும். அதே வேளையில் மூளைக்கு வேண்டிய சத்துக்களை கொடுக்கும்.

பதட்டம் குறைய :

தேர்வு வேளைகளில் ஒருவித பதட்டமும், பயமும் மனதில் கூத்தாடும். இதை குறைக்கவும், மனம் அமைதியாக செயல்படவும், நரம்பு மண்டலங்கள் சிறப்பாக இயங்கவும். மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவும், நாடி சுத்தி பிராணயாமம் மூன்று நிமிடம் தினமும் இரண்டு வேளை செய்யலாம். ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக படித்தப்பின் ஐந்து நிமிட இடைவேளை எடுத்துக்கொண்டு, ஒரு சின்ன நடை போடலாம், குதிக்கலாம். சூரிய நமஸ்காரம் செய்யலாம் அல்லது தண்டால் செய்யலாம். இவைகள் உடலின் ரத்த ஓட்டம்

சிறப்பாக செயல்பட உதவும். ஒவ்வொரு முறையும் படிக்க அமரும் முன் முகம் கை கால்களைக் கழுவி துடைத்து விட்டு செல்ல வேண்டும். இதுவும் உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அப்போது நரம்பு மண்டலங்கள் உற்சாகமடையும். மன ஒருமைப்பாடு, நினைவுத் திறன் கூடும். தேர்வு நேரத்தில் இப்படி நேரத்தை வீணாக்கலாமா என்று தோன்றலாம். நாம் செலவு செய்யும் இந்த சில நிமிடங்கள் நிச்சயமாக படிக்கும் திறனை மேம்படுத்தும்.

தேர்வு எழுதச் செல்லும் வேளையிலே:

தேர்வு எழுதச் செல்லும் போது, பதட்டமும், இதயத்தின் படபடப்பும் கூடும். சிலருக்கு இந்த பதட்டம் கூடுதலாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். எல்லாம் நன்றாக படித்து விட்டோமா? தெரிந்த கேள்விகள் வருமா? பதில் நன்றாக எழுத முடியுமா? மதிப்பெண்கள் என்னவாகுமோ? என்ற எண்ணங்கள் பொங்கும். இறைவன் மீது நம்பிக்கையுடன் உங்களது ஒரு காலையும், உங்கள் மீது நம்பிக்கையுடன் உங்கள் மறுகாலையும் எடுத்து வைத்து உற்சாகத்தோடு தேர்வு அறைக்கு கம்பீரமாக செல்லுங்கள்.

எது வந்தாலும் வரட்டும் எதிர் கொள்வேன், வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அப்போது யாவும் நல்லபடியாக நடக்கும். வெற்றி நிச்சயம். உங்கள் வெற்றிக்கும் உயர்வான எதிர்காலத்திற்கும் எமது வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

ப்ளஸ் டூ முடித்த பிறகு, என்ன படிக்கலாம்?


யாருக்கு என்னென்ன படிப்பு….? ஓர் அலசல் !

ப்ளஸ் டூ முடித்த பிறகு, என்ன படிக்கலாம்? இப்போது எந்த படிப்புக்கு நல்ல மவுசு? இன்றைக்கு மவுசுள்ள அந்தப் படிப்பை முடிக்கும்போது நாளைக்கு வேலைக்கான வாய்ப்பு எப்படி இருக்கும்?
ப்ளஸ் டூ தேர்வை எழுதவிருப்பவர்கள், அவர்களின் பெற்றோர், அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் என்று எல்லோரையும் சுற்றிச் சுற்றி எப்போதுமே எழும் கேள்விகள்தான் இவை.

கேள்விகள் பழையதென்றாலும், பதில்களைப் புதுசாக்குகிறது காலம்!
ப்ளஸ் டூ-வுக்குப் பின் மேற்படிப்பை தொடர்வோரின் தற்போதைய நிலவரம், 40 சதவிகிதம். இதில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே அதிக மதிப்பெண்களோடும், பொருளாதாரத்தில் தேறியவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த 10 சதவிகிதத்தினர்தான் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளைப் பற்றி யோசிக்கத் தலைபடுகிறார்கள். மீதமுள்ள 30 சதவிகிதத்தினர், ‘ஏதோவொரு படிப்பில் சேர்வோம். அதை முடித்த பிறகு கிடைக்கும் ஏதோ ஒரு வேலையில் தொற்றிக்கொண்டு வாழ்வை செலுத்துவோம்என்ற முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
உண்மையில் குறைந்த செலவில், அதிக காலவிரயமின்றி படிப்பை முடித்ததுமே கையில் வேலையைக் கொடுக்கும் கோர்ஸ்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொள்வது அந்த 30 சதவிகிதத்தினருக்கு மட்டுமல்ல மேற்படிப்பை பற்றியே யோசிக்காத மீதமுள்ள 60 சதவிகிதத்தினரில் கணிசமானவர்களுக்கும் பயன்படக்கூடும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
நம் நாட்டில் விவசாயத்தை அடுத்து, அதிகப்படி வேலை வாய்ப்புகள் டெக்ஸ்டைல்ஸ்துறையை முன்னிறுத்தி வளர்கின்றன. அப்பேரெல் பிராண்டிங்’ (Apparel Branding) எனப்படும் ஆயத்த ஆடைப் பயிற்சியின் கீழ், விற்பனை (Apparel Merchandising), ஆயத்த ஆடைகளில் மேம்பாடு (Apparel Product Development), தர உத்தரவாதம் (Apparel Quality Assurance)என சுவாரஸ்யமான தலைப்புகளில் ஏராளமான சான்றிதழ் படிப்புகள் இருக்கின்றன. மத்திய ஜவுளித்துறையின் கீழ் வரும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி முன்னேற்றக் குழுமம் (AEPL-Apparel Export Promotion Council)நிதியுதவியுடன் இதற்கான பயிற்சிகள், வேலை வாய்ப்பு உத்தரவாதத்துடன் கிடைக்கின்றன.
இதற்கடுத்து எலெக்ட்ரானிக்ஸ், வெல்டிங் படிப்புகளில் ஐ.டி.ஐ. முடிக்கும் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. புரொடக்டிவிடிக்காக இந்தப் பணிகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து பல தொழில் நிறுவனங்கள் புதுமை செய்கின்றன. அதேபோல, பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களில் தொழில் சார்ந்த படிப்புகளைப் பெறுபவர்களுக்கும் உத்தரவாதமுள்ள எதிர்காலம் இருக்கிறது.
பள்ளிப் படிப்பை ஆங்கிலம் வழியாக முடித்தவர்கள் மற்றும் ஆங்கில மொழித்திறன் ஈடுபாடு கொண்டவர்கள் பி.பி.ஓ. (BPO-Business Process Outsourcing), கே.பி.ஓ. (KPO -Knowledge Process Outsourcing), எல்.பி.ஓ. (LPO -Legal Process Outsourcing) போன்ற பயிற்சிகளைப் பெற்றால், உடனடி வேலைவாய்ப்பை பெறலாம். தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Institute of Entrepreneurship and Career Development) மேற்கண்ட பயிற்சிகளை அதிக செலவில்லாமல் பெற உதவுகிறது.
உணவு மற்றும் உபசரிப்பில் தனிப் படிப்புகளும் சமீப ஆண்டுகளாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. உள்நாட்டில் மட்டுமல்ல, உலகமெங்கும் வேலை வாய்ப்போடு காத்திருப்பது இந்த உணவு மற்றும் உபசரிப்புத் தொடர்பான படிப்புகள்தான்.
பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் (Bio Informatics) எனப்படும் உயிர்த் தகவலியல் படிப்புக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. மாலிக்குலர் பயாலஜி துறையில் (Molecular Biology) புள்ளியியல் (Statistics) மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பயன்பாடுகளை செலுத்தும் இந்தப் படிப்பானது சென்னை, அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழக கல்லூரிகளில் தரப்படுகின்றன.
இதேபோன்ற அதிக கவனம் பெறாத இன்னொரு படிப்பு (GPS-Geographical Information System). இணைய வசதி எல்லோருக்கும் சாதாரணமாக கிட்டும் இந்தக் காலத்தில், அதன் மூலம் புவியமைப்புகளை மேப்களாக தரும் தொழில்நுட்பம் பிரபலமாகி வருகிறது. இதைக் கற்றுக்கொடுக்கும் இந்தப் படிப்பை முடிப்பவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு இருக்கிறது.
இன்ஷூரன்ஸ், முதலீட்டுத்துறை, பணிபுரிபவர் மற்றும் ஓய்வுபெறுபவர் நிதி நல விவகாரங்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு உலகம் முழுமைக்கும் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அவற்றுக்கு வழி செய்யும் (Actuarial Science) படிப்புகளை மேற்கொள்வதும் சிறப்பு”,
இந்த டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளை நேரடியாகவும் படிக்கலாம். அல்லது ஏதாவதொரு அடிப்படை டிகிரி படிப்பை முடித்துவிட்டு, அல்லது அதனுடன் இணையாக இவற்றையும் மேற்கொள்வது புத்திசாலித்தனமானது.
 பொறியியல் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதும், நுழைவுக்கான நடைமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதும் ஆவரேஜ், பிலோ ஆவரேஜ் மாணவர்களுக்குகூட இன்ஜினீயரிங் ஸீட் கிடைக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால், அவர்கள் கல்லூரியில் நுழைந்ததும் பாடச் சுமையால் திணறிப் போகிறார்கள். அப்படிப்பட்ட மாணவர்கள், ஏதாவதொரு அடிப்படை அறிவியல் பாடத்தை இளநிலை படிப்பாக முடித்துவிட்டு, பிறகு அதே படிப்பையொட்டிய பொறியியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தால் அதிசயிக்கும் வகையில் சீக்கிரமே பிக்-அப் ஆகிறார்கள் (உதாரணமாக, பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி முடித்து, கெமிக்கல் இன்ஜினீயரிங் சேர்வது). இவர்களுக்கு நேரடியாக இரண்டாமாண்டில் அட்மிஷன் கிடைத்துவிடும். பொறியியல் படிக்க விரும்பும் ஆவரேஜ் மாணவர்கள் இம்மாதிரியான ஐடியாவை பின்பற்றினால், கல்லூரியில் சேர்ந்தது முதல் அரியர்களை சேர்த்துக் கொண்டே வராமல் நிறைவான, நிதானமான தேர்ச்சிகளைப் பெற முடியும்.
பொறியியலில் சிவில், மெக்கானிக், இ.சி.இ., இ.இ.இ, பி-ஆர்க் போன்ற படிப்புகள் என்றும் நிலையான வேலைவாய்ப்புக்குரியவை. ஏனெனில் நாட்டின் பொருளாதாரமும், உள்கட்டமைப்பு வசதிகளும் தொலைநோக்கு இலக்கில் சீராக பயணிப்பதால்ஸ என்றும் இந்தத் துறைகள் பசுமையாக இருப்பதுதான். சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட தொய்விலிருந்து மீண்டிருக்கிறது ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை. அவரவர் தனி ஆர்வத்தைப் பொறுத்து இப்படிப்பைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
தற்போது இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வாகின்றவர்களில் கணிசமானோர் பி.இ., எம்.பி.பி.எஸ். முடித்திருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வரவேற்புக்குரிய இந்த மாற்றத்துக்காக தொழிற்கல்வி படிப்போர் துவக்க வருடத்தில்இருந்தே ஐ.ஏ.எஸ். தயாரிப்பையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி போன்ற படிப்புகளை பொறியியலில் படிப்பதைவிட, கலை அறிவியல் கல்லூரி மூலம் பெறுவதே நல்லதென சில நடைமுறை உதாரணங்கள் காட்டுகின்றன. பிரபல பயோகான்நிறுவனத்தின் கிரண் மஜூம்தர் ஷாவின் கருத்தும் இதுவே. இவர் தனது நிறுவனத்துக்கான வேலை வாய்ப்பில் கலை அறிவியல் கல்லூரிகளில் பயோடெக் பட்டம் பெற்றவர்களுக்கே முன்னுரிமை தந்திருக்கிறார்.
இந்த பயோடெக் படிப்பை இளநிலை, முதுநிலை எனத் தனித்தனியாக படிப்பதற்கு பதில் ஒருங்கிணைந்த முதுநிலை படிப்பாக (Integrated Course) பெறலாம். ஒரே வீச்சில் படிக்கும்போது, மாணவருக்கு கிடைக்கும் தெளிவும் சிறப்பாக அமையும்என்ற சுகுமாரன்,
புதுமையையும், சவால்களையும் விரும்பும் புத்திசாலி மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்ஸ் (Aeronantics), ஸ்பேஸ் டெக்னாலஜி (Space technology) படிப்புகள் காத்திருக்கின்றன. இப்படிப்புகளை ஏதோ ஒரு நிறுவனத்துக்கு பதில் ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் போன்ற தரமான கல்வி நிறுவனங்களில் பயில்வது வேலை வாய்ப்பை வரவேற்புடன் வசப்படுத்தும்.