சனி, 30 மார்ச், 2013

சாதனை பெண்மணி நவநீதம்பிள்ளை



சாதனை பெண்மணி நவநீதம்பிள்ளை
1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் பிறந்த ஒரு தமிழரான நவநீதம் பிள்ளை ஓர் இந்திய வம்சாவளிப் பெண். தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததன் பிறகு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்துக்கு தேர்வுசெய்யப்பட்ட வெள்ளையினத்தவரல்லாத முதல் நீதிபதி என்ற பெருமைக்குரியவர்.
இவர் நிறவெறி மிகுந்த தென் ஆப்பிரிக்காவில், நீதிபதியாக உயர்ந்ததே மாபெரும் சாதனைதான். இப்போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளராக அகில உலகமும் வியப்புடன் பார்க்கும் உயரத்தில் ஜொலிக்கிறார்.
இந்த நீதி தேவதை. சமீபத்தில், தன் முன்னோர்கள் பிறந்த பூமியான இந்தியாவுக்கு வருகை புரிந்த நவநீதம் பிள்ளை, ஊடகங்களின் முக்கிய செய்தியானார்.

தன் வாழ்க்கை முழுதுமே பல வேதனைகளை சந்தித்த இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே தென் ஆப்பிரிக்காவில்தான். ஏழை குடும்பத்தில் ஒரு பேருந்து ஓட்டுநரின் மகளாகப் பிறந்த இவரை, உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வரை சென்று சட்டம் படிக்கச் செய்தது இவருடைய அம்மாதானாம்.
என் அம்மாவை என் தாத்தா பள்ளிக்கு அனுப்ப வில்லை, எழுத, படிக்க தெரிந்து விட்டால், என் அம்மா யாருக்காவது காதல் கடிதம் கொடுத்து விடுவாரோ என்கிற பயம்தான் காரணமாம். தனக்கு நேர்ந்த கொடுமை எங்கள் நால்வருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அம்மா மிகுந்த கவனத்துடன் இருந்தார். பெண்களுக்கு கல்வியும் சுதந்திரமும் அவசியம் என்று அவர் நம்பியதால்தான், இன்று நான் இப்படி ஒரு பதவியில் வந்து உட்கார்ந்திருக்கிறேன்! என்கிறபோது ஈரத்துடன் பளபளக்கின்றன அவர் விழிகள்!

1982ம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.
1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார். அப்போதே நிற வெறிக்கு எதிராக மிகுந்த உறுதியுடன் குரல் எழுப்பினார் நவநீதம் பிள்ளை. இதற்காக அப்போதைய தென் ஆப்பிரிக்காவை ஆண்ட வெள்ளையர்களால் இவர் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். ஒரு கட்டத்தில் இவருடைய பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது. அதற்கெல்லாம் அயர்ந்து விடாமல் சட்டத்தின் மூலமே தன்னைத் தற் காத்துக் கொண்டதோடு, நிற வெறியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு விடிவெள்ளியாகவும் விளங்கினார்.
நிற வெறிக்கு எதிராக 28 ஆண்டுகள் போராடினேன். சட்டக் கல்லூரியில் வெள்ளையர் அல்லாதவர்களுக்கான தனி வகுப்பறையில் படித்துத்தான் சட்டம் முடித்தேன்.
ஒரு வழக்குரைஞராக, நீதிமன்றத்தில் பிறரின் உரிமைகளுக்காக வாதாடிய சமயத்திலும்கூட, நான் வெள்ளையர்களில் ஒருத்தி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நீதிபதியின் அறைக்குள் நுழைகிற உரிமை எனக்குத் தரப்படவில்லை. ஆனால், அந்த வலிகளெல்லாம்தான் எனக்கு வலிமை தந்தது என்று தன் வாழ்நாளின் கறுப்புப் பக்கங்களை கசப்போடு திரும்பிப் பார்க்கிறார் நவநீதம் பிள்ளை.

தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்காவும் , இவரது கணவர் உட்பட தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் அவர் ஒரு பாதுகாவலராக கடமையாற்றியவர்.
1973 இல் நெல்சன் மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றார்.

1992இல் தன்னுடன் வேலை பார்த்த சக வழக் கறிஞர்கள் இருவர் துணையுடன் "இக்வாலிட்டி நவ்" என்ற பெண்களுக்கான மனித உரிமை அமைப்பை தோற்றுவித்து பெண்களின் நலனுக்காகவும் போராடி வருகிற இவர், கறுப்பு இன மக்களின் மனதில் எவரெஸ்ட்டாக உயர்ந்து நிற்கிறார்.

மனித உரிமை சட்டங்கள் பயின்றிருந்த அவர், 1995ல் தென்னாப்பிரிக்காவின் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதுவரை வெள்ளையினத்தவர் மட்டுமே வீற்றிருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் ஆசனத்தை அலங்கரித்த வெள்ளையரல்லாத முதல் ஆள் அவர்தான்.

ருவாண்டா இனப்படுகொலையை விசாரிப்பதற்காக டான்ஸானிவின் அருஷா நகரில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்டதிலிருந்து சர்வதேச அளவில் அவர் பங்காற்றத் துவங்கினார். நான்கு ஆண்டுகாலம் அப்பொறுப்பை வகித்த பின்னர் தி ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் நீதிபதியாக இருந்தார்.
2003 இல் இவருக்கு பெண்கள் உரிமைக்கான குரூபர் பரிசு வழங்கப்பட்டது.
பூகோள ரீதியாகவும் பாலியல் மற்றும் அனுபவ ரீதியாகவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் பொறுப்புக்கு இரு குழுக்களால் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த சாதனைக்குப் பின்னால் நிச்சயம் என் கணவர் பரஞ்ஜோதியின் பங்கு இருக்கிறது. அவரும் வழக்குரைஞர் தான். நிற வெறிக்கு எதிராக அவர் வாதாடியதால் ஐந்து மாதங் கள் சிறையில் தள்ளப்பட்டார். இப்போது அவர் உயிருடன் இல்லை என்றாலும் என் மனதிலும் நினைவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்று உணர்வுபூர்வமாக நினைவுகூர்கிறார் தன் கணவரை ஒரு காலத்தில் வெள்ளையர்கள் எங்களை பிளாக் பியூட்டி என்று அழைத்தனர். ஆனால், குதிரைகளைத் தான் அப்படி அழைப்பார்கள் என்று தெரிய வந்தபோது அந்த வார்த்தையையே நான் வெறுத்தேன். அப்படி, அவர்களின் ரத்தத்திலேயே கலந்திருக்கும் நிறவெறிக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இப்போது உள்ள குழந்தைகளுக்கு நிற வெறி என்றால் என்ன என்று கூட தெரியவில்லை. அது தான் எங்களின் வெற்றி… என்று கண்களை மூடி மெது வாக சிரிக்கிறார் நவநீதம்பிள்ளை
நீதி என்றும், யாருக்கும் மறுக்கப்படுவதில்லை என்று நம்புவோம்!

வியாழன், 28 மார்ச், 2013

உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!

உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!

உலகில் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் உயரவேண்டும், முன்னேற வேண்டும், வளர வேண்டும் என்று விரும்புகின்றனர்.

நீங்கள் முன்னேற, உயர, வளர விரும்பினால் உயர்ந்த குறிக்கோள் ஒன்றை வரையறுத்துக் கொண்டு, உழைக்கத் தயாராகி விடவேண்டும்.

ஆசை காரணமாக உயர்ந்த குறிக்கோளை வரையறுப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால், குறிக்கோளை நோக்கி உழைக்கத் துவங்கும் போது மலைப்பாகத் தோன்றும்.

மலைத்துப்போய் ஒதுக்கிவிடுவீர்களாயின் வாழ்க்கை முழுதும் ஆசைப்படுபராகவும், கனவு காண்பவராகவுமே கழிக்க வேண்டி நேரும்.

உங்கள் குறிக்கோளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முடியாது என்னும் எண்ணம் உடனே வந்து உங்களிடம் ஒட்டிக்கொள்ளும்.

முடியாது என்னும் எண்ணத்தைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளை, பகுதி பகுதியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். பிரித்து எண்ணிப் பார்த்தால் மலைப்போ, திகைப்போ தோன்றாது.

உங்களால் ஆயிரம் கி.மீ. நடக்க முடியுமா? என்று கேட்டால் முடியாது என்னும் பதிலை உடனே கூறி விடுவீர்கள். உங்களால் ஆயிரம் கி.மீ. தூரம் ஆயிரம் நாட்களில் நடக்க முடியுமா? என்று கேட்டால் ஏன் முடியாது? என்று உற்சாகமாக்க் கேட்பீர்கள்.

குறிக்கோளை அடைய முடியுமா? என்று ஒட்டுமொத்தமாக ஏன் சிந்திக்கிறீர்கள்? உயர்ந்த குறிக்கோள்களை பத்து ஆண்டுகளில் அடைந்தாலே மாபெரும் வெற்றிதான்.

பத்து ஆண்டுகளில் 120 மாதங்கள் உள்ளன. 3650 நாட்கள் உள்ளன. உங்கள் செயல்திட்டத்தை உருவாக்கும் போது குறிக்கோளை 10 ஆண்டுப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆண்டுப் பகுதியையும் 12 மாதப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதப் பகுதிகயையும் 30 நாட்பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

இப்போது எளிதாகத் தோன்றுகிறதா இல்லையா? ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படவில்லை, என்னும் பழமொழியைப் புரிந்து கொள்ளுங்கள்.

உலகம் பார்த்து வியக்கும் தாஜ்மகாலோ செங்கோட்டையோ பல ஆண்டுகள், பல மாதங்கள், பல்லாயிரம் நாட்கள் தொடர் உழைப்பில் உருவானவை தாமே!

பத்தடுக்கு மாளிகையேயாயினும் ஒவ்வொரு செங்கல்லாகவே அடிக்கப்படுகிறது. ஒவ்வொரு அடுக்காகவே உயர்ந்து மாளிகை ஆகிறது. ஆகவே, நீங்கள் எடுத்துக்கொண்ட குறிக்கோள் அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும். தொடர் முயற்சியும், விடா முயற்சியும் வெற்றி என்னும் பெருமையைத் தரும்.

இதை நீங்கள் புரிந்து கொண்டால் உழைப்பின் மேன்மையை உணர்ந்து செயல்படுவீர்கள். உழைப்பின் வாரா நன்மைகள் உள்ளனவா?

உழைப்பதற்கு அஞ்சுபவர்களைப் பாருங்கள் அவர்கள் இரண்டு வகையினர், ஒருவகையினர் வறுமையிலும், பற்றாக் குறையிலும் பரிதவித்துக் கொண்டிருப்பர். இன்னொரு வகையினர் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குள்ளநரிகளாக இருப்பர்.

முதல்வகையினர் சோம்பேறிகள், இரண்டாவது வகையினர் மோசடிப் பேர்வழிகள்.

சோம்பேறிகள் தங்கள் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள அதிர்ஷ்டத்தை நம்பி இருப்பார்கள். லாட்டரிச்சீட்டு, குதிரைப் பந்தயம், சீட்டாட்டம் போன்றவைகளில் ஈடுபட்டு, மேலும் கடன்பாட்டு மனிதப் பிறவியை மாசுபடுத்திக் கொள்வார்கள்.

குறுக்குவழியினர் திருட்டு, ஏமாற்று, வாட்டி வதைத்து வட்டி வாங்குதல், கலப்படம், கள்ளச்சந்தை, கொள்ளை, கொலை, கொள்கையில்லா அரசியல், இலஞ்சம், ஊழல் போன்ற கொடுஞ்செயல்களால் பணம் சேர்க்க முயல்பவர்கள். இவர்கள் சேர்க்கும் செல்வம் களவினால் ஆகிய ஆக்கம். அது அளவிறந்து ஆவது போலக் கெடும்.

இந்த இருவகையிலும் சேராதவரா நீங்கள்? நல்லது. இயற்கை தரும் தண்டைனைக்குத் தப்பி விட்டீர்கள்.

நீங்கள் செல்வம் சேர்க்க உழைப்பது நல்லது தான். ஆனால், இயற்கையுடன் முரண்பட்ட வழிகளில் முயன்றால், தற்காலிகமாக உயர்வது பொன்று தோற்றமளிப்பினும் முடிவு பரிதாபமாக இருக்கும்.

சட்டத்தின் பார்வையிலிருந்து ஒருவன் தப்பி விடலாம. இயற்கையின் பார்வையிலிருந்து எவரும் தப்ப முடியாது.

இயற்கை ஒழுங்கின்மையையோ, ஒழுங்கீனத்தையோ ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை. சரியான நேரத்தில், சரியான முறையில் இயற்கை தன் நியாயத்தீர்ப்பை நேர்த்தியாய் வழங்கிவிடும்.

நீங்கள் இயற்கையுடன் ஒன்றுபட்ட முறையில் உழைப்பீர்களானால் அதுவே உயர்வைத் தரும். ஊக்கமின்றிச் சோம்பி இருப்பீர்களானால் அதுவே தாழ்வே உருவெடுக்கும்.

இயற்கையுடன் ஒன்றுபடும் போது உங்கள் செயல் திட்டங்களில் உண்மையும், நேர்மையும் ஒளிரும். அப்போது இயற்கை அன்னை உங்கள் கரம் பிடித்து வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வான்.

இயற்கையின் உதவியோடு குறிக்கோளை அடைய செயல்திட்டத்தை வகுத்துவிட்டீர்கள். இனி தயக்கமோ, தாமதமோ இல்லாமல் முதல் அடியை எடுத்து வைத்து விடுங்கள். ஆயிரம் கிலே மீட்டர் பயணம் ஆயினும் அது ஓரடியில்தான் தொடங்குகிறது என்பது அற்புதமான மொழி.

வெற்றி கிடைக்குமா? என்று சந்தேகத்துடன் சிந்திக்க வேண்டாம். நான் நம்புவது நடந்தே தீரும் என்னும் எண்ணத்துடன் அடுத்த அடையை எடுத்து வையுங்கள்.

உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய சில உளவியல் சார்ந்த, அறிவியல் ரீதியான ஒரு செய்தியை அறிந்து கொள்ளுங்கள்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும், உயர வேண்டும், வளர வேண்டும், விரும்புவதை ( வெற்றி ) அடையவேண்டும் என்றே இயற்கை விரும்புகிறது. அதற்கேற்பவே மனிதனின் உடல் இயக்க விதிகளை இயற்றி வைத்திருக்கிறது.

ஒரு குழந்தையின் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்கினால் இந்த உண்மை தெளிவாகும்.

தாய் ஒரு குழந்தையைப் பெறுகிறாள். பிறந்தபின் அதைக் கையில் எடுத்துச் சீராட்டாமல் உயிர் வாழ்வத்ற்குரிய உணவை ( பாலை ) மட்டுமை புகட்டிவந்தால் போதும், குழந்தை அழுது, அலறி, பசியாறி, உறங்கி மீண்டும் அழுது… உயிர் வாழும்.

மூன்று மாதங்கள் இப்படியே தொடர்ந்தாலும் குழந்தை ஒருநாளில் குப்புற விழும். மீண்டும் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவை மட்டும் புகட்டிக்கொண்டே வந்தா அது தானே எழுந்து அமரும். தொடர்ந்து உணவூட்டி வந்தால் ஒரு நாள் தானே எழுந்து நிற்கும், விழும், அழும், ஆனாலும் அடங்கி இராமல் மீண்டும் எழுந்து நின்று தன் முதலடியை முன்னோக்கி எடுத்து வைக்கும்.

அதுமட்டுமின்றி உடல் மேல் நோக்கி வளரும். தன் சூழ்நிலையிலிருந்து அடைய முயற்சித்து வெற்றி பெறும்.

குழந்தையால் எப்படி முடிகிறது. இயற்கை, தான் இயற்றி வைத்துள்ள சட்டங்களின்படி அதனோடு ஒத்துழைக்கிறது.

ஆகவே, நீங்கள் வாழ்வில் உயரவேண்டும் என்பதும், முன்னேற வேண்டும் என்பதும், வளர வேண்டும் என்பதும், விரும்புவதை
( வெற்றி ) அடையவேண்டும் என்பதும் இயற்கைச் சட்டம். இயற்கையுடன் கரம் கோர்த்துக் கொண்டால். நீங்கள் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம். இயற்கையுடன் கரம் கோர்த்துக் கொள்ளவதா? எப்படி?

உங்கள் குறிக்கோள் என்ன? அதை நிறை வேற்றுவதற்கு நீங்கள் வரையறுத்துள்ள ஆண்டு எது? அதை அடைவதற்கு நீங்கள் தேர்வு செய்துள்ள தொழில், வணிகம் அல்லது விற்பனை எது?

அந்தத் தொழில், வணிகம் அல்லது விற்பனை தொடர்பான முதல் நடவடிக்கையை இன்றே, இப்பொழுதே தொடங்குங்கள். ஒத்தி வைக்காதீர்கள். தள்ளிப்போடாதீர்கள் அடுத்த நாளில் இன்னொரு நடவடிக்கை, மறுநாள் அது தொடர்பான மேலும் ஒரு நடவடிக்கை.

ஒரு வாரத்தில் பொருத்தமான ஏழு செயல்கள், முன்னேற்றத்தை நோக்கி, மாதத்தில் முப்பது செயல்கள், ஒரு ஆண்டில் முந்நூற்று அறுபத்தைந்து செயல்கள், ஒரு ஆண்டில் முற்நூற்று அறுபத்தைந்து செயல்கள்.

ஒரு ஆண்டு முழுவதும் நீங்கள் தொடர்ந்து செய்த செயல்கள் தொழிலாக, வணிகமாக, விற்பனை வாய்ப்பாக உருவாகி இருக்கும் முந்நூறு அறுபத்தைந்து செங்கற்கள் சேர்த்த ஒரு சுவராவது போன்று.

இப்படியாக வளர்ச்சியை நோக்கி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும், பல சுவர்களாக மாறி ஒன்றுக்கொன்று இணைந்து வெற்றி என்னும் மாளிகையாக மாறிவிடும்.

முயற்சியை நிறுத்தாமல் விடாமுயற்சி யாகவும் தொடர்முயற்சியாகவும் கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமனா இயற்கைச் சட்டம். தினமும் ஒரு சாதகமான நடவடிக்கை எடுக்கும் போது சட்டப்படி உங்களுக்கு வெற்றி உத்திரவாதம் ஆகிறது.

அதைவிடுத்து நேரம் கிடைக்கும் போதும், விருப்பம் ஏற்படும் போதும் மட்டும் உழைப்பது மற்ற நேரங்களில் சோம்பி இருப்பது, விட்டு விட்டு முயல்வது, ஏவராவது விரட்டினால் மட்டுமே உழைப்பது என்று நினைப்பவருக்கு வெற்றி எட்டாக் கனியாகும்.

வெற்றி செடி வேர்பிடித்து விட்டதா என்று பிடுங்கிப் பார்த்து நடவேண்டாம் உழைப்பு என்னும் நீரையும், நம்பிக்கை என்னும் உரத்தையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள்.

நாள்தோறும் ஒரு நடவடிக்கை என்னும் ஆலோசனையைத் தவறாமல் கடைப்பிடியுங்கள். கடைப்பிடிக்கும் போது இயற்கையின் கரத்தோடு உங்கள் கரம் இணைந்து விடுகிறது.

இணையும்போது இயற்கையின் கரத்திலுள்ள வெற்றி மாலை உங்கள் கழுத்திற்கு வந்துவிடுகிறது.

ஆகவே… அறிந்து கொள்ளுங்கள்.
`
வெற்றியின் ஒன்பதாவது இரகசியம்…

உழைப்பே உயர்வு,
உறக்கம் தாழ்வே!

செவ்வாய், 26 மார்ச், 2013

நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி?

நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி?

மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றிகரமான முடிவுகளை எதிர்பார்க்கும் ஒரு சிறந்த அணுகுமுறையே நேர்மறை எண்ணங்கள் (positive thinking) எனப்படுகிறது.

எல்லோரும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா என்றால் பலரிடம் பதிலிருக்காது. வாழ்க்கையில் பல பேர் பத்து சதவிகிதமாவது எதிர்மறை எண்ணங்களை (negative thinking) கொண்டிருப்பர். 

எதிர்மறை எண்ணங்களை தொடர்ந்து வளர்த்துக் கொள்பவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறுவர். ஆனால் நேர்மறை எண்ணங்கள் நம்பிக்கையை ஆதாரமாக பயன்படுத்தி மன அழுத்தத்தை போக்க பேருதவி புரிகிறது.

நேர்மறை எண்ணங்களால் பல நல்ல விஷயங்கள் ஒருவரது வாழ்வில் நடைபெறுகின்றன. நேர்மறை எண்ணங்களால் ஆயுள் காலம் அதிகரிக்கிறது. மன அழுத்தம் குறைகிறது. துன்பங்களை தாங்கும் உந்துசக்தி கிடைக்கிறது. நல்வாழ்வு அமைகிறது.

இதயநோயினால் ஏற்படும் இறப்பு ஆபத்து குறைகிறது. கஷ்டமான காலங்களில் கஷ்டங்களை தாங்கி, மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை அளிக்கிறது.

இப்படி நேர்மறை எண்ணங்களை பற்றி பல சிறந்த விஷயங்களை கூறிக்கொண்டே போகலாம். இனி எவ்வாறெல்லாம் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

1. நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டு வரவும்:

தினசரி நிகழ்வுகளில் ஒரு நகைச்சுவையான விஷயத்தை நாட வேண்டும். வாழ்க்கையில் சிரிக்க முடிந்த அளவில் சிரித்தால், குறைந்த மன அழுத்தத்தை உணர்வோம்.

2. நேர்மறை எண்ணங்களை கொண்ட மனிதர்களை அமைத்துக் கொள்ள வேண்டும்:

வாழ்க்கையில் வரும் மனிதர்கள் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு ஆதரவாக நல்ல பல அறிவுரைகளை தந்து, உங்களது கருத்துக்களை காது கொடுத்து பொறுமையுடன் கேட்பவராக இருப்பவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும். இதனால் அவர்கள் மூலம் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் எதிர்மறை எண்ணங்களை உடையவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால், அவர்கள் மூலம் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். இதனால் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும்.

3. சுய சிந்தனை மூலம் நேர்மறை எண்ணங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்:

நேர்மறை எண்ணங்களை சிந்திக்க சில வழிகளை பின்பற்றலாம். உதாரணத்திற்கு ‘இதற்கு முன் நான் இந்த செயலை செய்ததே இல்லை' என்று ஒரு விஷயத்தை யோசிப்பதை விட, ‘புதிதாக ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது' என்று நேர்மறையாக சிந்திக்க வேண்டும்.

அதேபோல் ‘இந்த செயலை செய்ய மிகவும் கடினமாக இருக்கிறது' என்று எண்ணாமல், நேர்மறையாக ‘நான் வேறொரு கோணத்தில் இதை அணுகி சமாளிப்பேன்' என்று சிந்திக்க வேண்டும். இப்படி எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

4. மற்றவர்களுக்கு உதவலாம்:

மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அதிலிருந்து விடுபட மற்றொரு நபருக்கு ஏதாவது நன்மை செய்ய முயற்சி செய்யலாம். இவ்வாறு செய்யும் போது உங்களது தவறான எண்ணங்களிலிருந்து கவனத்தை வேறு நல்ல விஷயத்தில் திசை திருப்ப முடியும். மற்றவருக்கு செய்யும் நன்மைகளால் மனத்திருப்தியும் ஏற்படும். இதனால் நல்ல எண்ணங்கள் மனதில் உருவாக ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

5. நேர்மறையான மேற்கோள்களை படிக்கவும்:

நேர்மறையான மேற்கோள்களை உங்களது கணிணியில், பிரிட்ஜ் கதவுகளில் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடியில் காகிதத்தில் எழுதி ஒட்டி வைக்கலாம். இதனால் ஒவ்வொரு முறையும் இவற்றை பார்க்கும் போது அவற்றை படித்து நல்ல எண்ணங்களை மனதில் விதைக்கலாம்.

6. தியானம் செய்யவும்:

மனதை அமைதிப்படுத்தி நல்ல எண்ணங்களை உருவாக்குவதில் தியான முறையை பின்பற்றலாம். அதற்கு அமைதியாக கண்களை மூடிக் கொண்டு ஒரு மணி நேரம் எந்த கவலை தரும் விஷங்களை பற்றி சிந்திக்காமல் ஒரே விஷயத்தை நேர்மறையாக சிந்திக்க வேண்டும். ஆரம்பத்தில் இது கடினமாக இருக்கும். ஆனால் தொடர்ந்து செய்து வர நேர்மறையான எண்ணங்களால் மனம் சூழப்பட்டு எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் வாழலாம்.

செவ்வாய், 19 மார்ச், 2013

எத்தனை அதிர்ஷ்டக்காரர் நீங்கள்?


எத்தனை அதிர்ஷ்டக்காரர் நீங்கள்?

"நல்லதே பார், நல்லதே நினை, எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என்று நம்பியது மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதை உபதேசிப்பவர் அந்த அறிஞர். இறைவன் தந்திருக்கும் நன்மைகளை சிந்திக்கவும், அவற்றிற்காக நன்றியுடன் இருக்கவும் தன் பிரசாரங்களில் கூறுவார் அவர். இருப்பவற்றிற்காக நன்றியுடன் இருந்தால் மட்டுமே மேலும் நன்மைகள் நம்மிடம் வந்து சேரும் என்று அவர் உறுதியாகச் சொல்வார்.

“ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு கோடு வரையுங்கள். வலது புறம் பெரிதாய் + குறியிட்டு உங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல விஷயங்களை எழுதுங்கள். இடது புறம் – குறியிட்டு உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளையும், தீமைகளையும் எழுதுங்கள். உண்மையாக ஆழமாக சிந்திப்பீர்களானால் கண்டிப்பாக வலது புறம் உள்ள பட்டியல் தான் நீண்டு இருக்கும். நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டக்காரர் என்பதை அப்போது தான் உங்களால் உணர முடியும்” என்று ஒரு சொற்பொழிவில் அவர் சொன்னதுடன் அனைவருக்கும் ஒரு வெள்ளைத் தாளைத் தந்து அப்போதே அப்படி எழுதிப் பார்க்கச் சொன்னார்.

அப்படி எழுதியவர்களில் பெரும்பாலானோருக்கு – குறியில் தான் எழுத நிறைய இருந்தது. ஒருசிலர் மட்டுமே + குறியில் நிறைய எழுதி இருந்தார்கள். அவர்களிடம் இப்போது இருக்கும் வாழ்க்கைக்கு இறைவனிடம் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பச் சொன்னார்.

மீதமுள்ளவர்களில் + குறியில் மிகக் குறைவாக எழுதியவர்களில் ஒருவரைத் தன்னிடம் வரச் சொன்னார். முத்து என்பவர் – குறியில் பெரிய பட்டியல் இட்டிருந்தார். ஆனால் + குறியில் எழுத ஒன்றுமே இல்லை என்று எதுவுமே எழுதாமல் இருந்ததால் அவரே அந்த அறிஞரிடம் போகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

அறிஞர் முத்துவிடம் இருந்து அந்தத் தாளை வாங்கிப் பார்த்தார். – குறியில் நுணுக்கி நுணுக்கி நிறைய எழுதி இருந்தார்.

அறிஞர் பேனாவை எடுத்துக் கொண்டு முத்துவிடம் கேட்டார். “உங்கள் மனைவி உங்களைப் பிரிந்து எவ்வளவு காலம் ஆகிறது?”

முத்துவிற்குக் கோபம் வந்து விட்டது. “என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து விட்டதாக யார் சொன்னது? என்னுடன் தான் இருக்கிறாள். நாங்கள் அன்பாகத் தான் இருக்கிறோம்’

அறிஞர் + பகுதியில் கொட்டை எழுத்தில் எழுதினார். “அன்பான மனைவி உடன் இருக்கிறாள்”

பின் முத்துவிடம் கேட்டார். “உங்கள் குழந்தைகள் எந்த ஜெயிலில் இருக்கிறார்கள்?”

அறிஞராக இருந்து கொண்டு இப்படி ஏடாகூடமாகக் கேட்கிறாரே என்று கோபத்துடன் நினைத்த முத்து சொன்னார். ”என் பிள்ளைகள் நல்லவர்கள். ஜெயிலுக்குப் போகிற அளவில் மோசமாய் இல்லை”

அறிஞர் + பகுதியில் அடுத்ததாக எழுதினார். “நல்ல பிள்ளைகள் இருக்கிறார்கள்”

பின் அறிஞர் கேட்டார். “உங்கள் வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா?”

முத்து பொறுமையை இழந்தார். “மருந்து கண்டுபிடிக்காத வியாதி எல்லாம் எனக்கு இல்லை..”

அறிஞர் + பகுதியில் எழுதினார். “கொடிய வியாதி இல்லை”

இப்படியே முத்து சிறிதும் எதிர்பார்த்திருக்காத கேள்விகள் சிலவற்றைக் கேட்டு + பகுதியில் எழுதிக் கொண்டு போன அறிஞர் ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டுச் சொன்னார். “இவை எல்லாம் சாதாரண நன்மைகள் அல்ல. இவற்றில் ஒன்று இல்லா விட்டாலும் நரக வாழ்க்கை அனுபவிக்க நேர்வது நிச்சயம். அப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் எல்லாம் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குத் தெரியாமலேயே இன்னும் நிறைய இருக்கின்றன. இத்தனைக்கும் சாதாரண நல்ல விஷயங்களுக்கு நான் இன்னும் போகவில்லை. அதெல்லாமும் கூட எழுத ஆரம்பித்தால் உங்களுக்கு + பகுதியில் எழுத இன்னும் பல பக்கங்கள் தேவைப்படும்....”

முத்து அங்கிருந்து போன போது புதிய மனிதராகப் போனார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் + பட்டியலும் அதிகரித்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

முத்துவைப் போலத் தான் பலரும் இருக்கிறோம். எத்தனையோ நன்மைகள் நம்மிடம் இருந்தாலும், நமக்கு நடந்திருந்தாலும் அவற்றை அங்கீகரிக்கக் கூட மறந்து விடுகிறோம். அதில் ஒன்றில் குறைபாடு சிறிது வந்தால் மட்டும் அந்தக் குறைபாட்டை வைத்துத் தான் அதைக் கவனிக்கிறோம். அது அப்போது மட்டுமே பெரிய விஷயமாகி விடுகிறது. இந்தக் குணம் தான் நம்முடைய சந்தோஷமின்மைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.


அடுத்தவரிடம் இருந்து, நம்மிடம் இல்லாத நன்மைகளைக் கவனித்து வருத்தப்படும் அளவுக்கு நாம் அடுத்தவரிடம் இல்லாத, நம்மிடம் இருக்கும் நன்மைகளைக் கவனிக்க முடிந்தால், நாம் எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்பதைக் கண்டிப்பாக உணர்வோம். உலகில் இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாகக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அவற்றில் எத்தனை சிறிய சதவீதம் மட்டும் தான் நமக்கு உள்ளது என்பதும் நமக்குப் புரியும்.

- பட்டியல் அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கவே இருக்கிறது. அப்படி இல்லாத ஒருவர் இந்த பூமியில் இது வரை பிறந்ததில்லை. இனியும் பிறக்கப் போவதில்லை. எனவே அதற்கு விதிவிலக்காகும் ஆசை யாருக்கும் வேண்டியதில்லை. + பட்டியலை அறிந்திராமல் வாழ்க்கையில் எதுவுமே சரியில்லை என்ற கற்பனை அபிப்பிராயம் இல்லாமல் இருந்தால் போதுமானது.

இருக்கின்ற நன்மைகளைப் பார்க்கின்ற மனநிலை இல்லாததால் முத்துவின் அதிர்ஷ்டத்தை சுட்டிக் காட்ட அந்த அறிஞர் சில ஏடாகூடமான கேள்விகள் கேட்க வேண்டி வந்தது. நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையோடு பார்க்க முடிந்தால் அடுத்தவர் உதவி இல்லாமலேயே நம்மிடம் உள்ள நன்மைகளை நன்றியுடன் நம்மால் உணர முடியும்.

சரி, நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

புதன், 13 மார்ச், 2013

விளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்!


விளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்!

எதை விதைக்கிறோமோ அதைத் தான் அறுவடை செய்ய முடியும் என்பது விதி. துவரையை விதைத்து அவரை விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. தாவரவியலில் மட்டுமல்ல இந்த உண்மை மனிதனின் வாழ்வியலிலும் கூட மாற்ற முடியாத அடிப்படை விதியாக இருக்கிறது. எதையெல்லாம் செய்கிறோமோ அதற்கான விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.

நம் முன்னோர்கள் இதை ‘கர்மா’ என்று சொல்வார்கள். நம் செயல்களின் விளைவு இந்தப் பிறவியில் அனுபவிக்கப்படா விட்டால் அடுத்த பிறவி வரை கூடத் தொடரும் என்றார்கள். உங்கள் நிழல் கூட இருட்டில் மறைந்து விடும். ஆனால் நீங்கள் செய்த செயல்களின் விளைவான கர்மா தன் பலனை அனுபவிக்கச் செய்யும் வரை என்றும் கூடவே வரும். அதனால் தான் பெரியோர்கள் ‘இறந்த பின்னும் கூடவே வருவது அவரவர் நல்லது, கெட்டது தான்” என்பார்கள்.

விதைகளின் தன்மை விளைச்சலில் தெரிவது போல செயல்களின் தன்மை அதன் விளைவுகளில் தெரியும். நடும் போது யாரும் பார்க்கவில்லையே என்று ஒருவன் கோணல் மாணலாக நாற்றுகளை நடலாம். ஆனால் அவை வளர்ந்த பின் என்ன நட்டிருக்கிறீர்கள் என்பதையும் எப்படி நட்டிருக்கிறீர்கள் என்பதை உலகிற்குக் காட்டாமல் விடாது. அதனால் தவிர்க்க முடியாத இந்த விதிக்கு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள். அப்படி நடக்க வாய்பேயில்லை. ஏனென்றால் இந்த அடிப்படை விதியிலேயே உலகம் அன்றிலிருந்து இன்று வரை இயங்குகிறது. இந்த விதியே இயற்கை. இந்த விதியே இறைவன்.

எனவே நன்மைகளை தன் வாழ்க்கையில் சந்திக்க விரும்பும் மனிதன் தன் செயல்களில் நன்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தீமைகளைச் செய்து விட்டு தனக்கு நன்மை நடக்கும் என்று நம்புபவன் கிழக்கு திசையில் உள்ள ஊருக்குச் செல்ல ஆசைப்பட்டு மேற்கு திசை நோக்கி நடக்கும் முட்டாளுக்கு இணையாகிறான்.

எல்லா அக்கிரமங்களையும் செய்து விட்டு கங்கையில் மூழ்கினாலும் பாவத்தைக் கழுவி விட முடியாது. உங்கள் செயல்களைக் கண்டு கொள்ளாமல் இருக்க இறைவன் மாமூல் வாங்கும் அரசு அதிகாரி அல்ல. ஆகையால் கோயில் உண்டியல்களில் கோடி கோடியாய் கொட்டினாலும் உங்கள் கணக்கு சரியாகி விடாது. உங்கள் கணக்கு சரியாவது அதற்குத் தகுந்த விளைவோடு தான்.

சில சமயங்களில் நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகளும், தீய செயல்களுக்கு தீய விளைவுகளும் கிடைப்பதற்குத் தாமதமாகலாம். அந்த தாமத காலத்தில் இந்த விதி பொய்ப்பது போன்ற தோற்றம் பலருக்கும் தோன்றலாம். ஆனால் தாமதமானாலும் விளைவுகள் வட்டியோடு வந்து சேரும் என்பதில் சந்தேகம் தேவையில்லை.

இடைவெளி எவ்வளவாக இருந்தாலும் செயலும் விளைவும் பிரிக்க முடியாத ஜோடி என்பதால் ஒன்றின் பின்னாலேயே மற்றது வந்து சேர்ந்து தானாக வேண்டும்.

எனவே விளைவுகளை மாற்ற விரும்பினால் மனிதன் செயல்களை மாற்ற வேண்டும். அதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. இந்த விதி நன்மை, தீமைகளுக்கு மட்டும் பொருந்துவது அல்ல. செயலின் சிறப்புத் தன்மைக்கும் இதே விதி தான்.

விளைவைப் பார்க்கையிலேயே அந்த செயல் எப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்து விடும். கவனமாகச் செய்தீர்களா, ஈடுபாட்டுடன் செய்தீர்களா, முழு மனதோடு செய்தீர்களா, அந்த செயலுக்குத் தேவையான அறிவுபூர்வமாகச் செய்தீர்களா என்பதை எல்லாம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் செயலின் விளைவு சொல்லி விடும்.

விளைவைப் ’போஸ்ட் மார்ட்டம்’ செய்தால் சின்னத் தவறு கூட இல்லாமல் செயல் செய்த விதத்தைச் சொல்லி விடலாம். சிறப்பாகச் செய்யும் செயல்கள் சிறப்பான விளைவுகளாக மலர்ந்து வாழ்க்கையை சோபிக்கும். வேண்டா வெறுப்பாகவோ, திறமைக் குறைவாகவோ செய்யும் செயல்கள் அதற்குத் தகுந்தாற் போல மோசமான விளைவுகளாக வெளிப்பட்டு களையிழந்து காட்சி அளிக்கும்.

இந்த அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் பலர் காலம் முழுவதும் கஷ்டப்படுகிறார்கள். ’நான் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் முன்னேற்றமில்லை’ என்று பலர் புலம்புவதை நாம் கேட்கிறோம். குறிப்பட்ட வகையில் எத்தனை உழைத்தாலும் முன்னேற்றமில்லை என்றால் அந்த உழைப்பில், உழைக்கும் விதத்தில் ஏதோ குறைபாடு இருக்கிறது என்றல்லவா அர்த்தம்.

அப்படி இருக்கையில் அப்படியே தொடர்ந்து உழைத்துக் கொண்டு போவது முட்டாள்தனம் அல்லவா? எங்கே என்ன தவறு இருக்கிறது அல்லது என்ன குறைபாடு இருக்கிறது என்று கண்டுபிடித்து அதன்படி சரி செய்து கொண்டு உழைத்தாலல்லவா நாம் நல்ல விளைவுகளைக் காண முடியும். இந்த அடிப்படை உண்மையை வாழ்க்கையில் உணர பலரும் மறப்பது தான் பரிதாபம்.

செய்கின்ற வேலையில் முன் யோசனையும், திட்டமிடுதலும், தேவையான திறமையும் இருந்தால் அந்த வேலை சீக்கிரமாக முடியும், சிறப்பாகவும் முடியும். ஆனால் உழைப்பு மட்டும் இருந்து முன் சொன்ன மூன்றும் இல்லா விட்டால் வேலையும் முடியாது, வேலை சிறப்பாகவும் இருக்காது. வேலை எதுவாக இருந்தாலும் விதி இது தான்.

செயலின் முடிவே விளைவு என்ற உண்மையே மிகப்பெரிய பாடம் என்று சொல்லலாம். இப்போது இருக்கும் நிலைமையில் உங்களுக்குத் திருப்தி இல்லையா? நீங்கள் அடைய நினைத்த வெற்றிகளை அடையவில்லையா? உலகம் உங்களை சரியாக மதிப்பிடவில்லை என்ற வருத்தமா? இதில் எதற்காவது ஆம் என்பது பதிலாக இருந்தால் முதலில் உங்களுடைய செயல்பாடுகளை ஆராய்ந்து பாருங்கள்.

செயல்படும் முறையிலும், செயல்படும் நேரத்திலும் குறைபாடுகள் இருக்கலாம். அல்லது செய்ய வேண்டிய ஏதோ முக்கியமானது விடுபட்டுப் போயிருக்கலாம். செய்யக் கூடாத ஏதோ ஒன்றை நீங்கள் செய்து கொண்டும் இருக்கலாம். சரியான கூட்டல், கழித்தலை உங்கள் செயல்களில் புகுத்தினால் கண்டிப்பாக விளைவுகள் மாற ஆரம்பிப்பதைப் பார்க்கலாம். அதை விட்டு விட்டு வருந்துவதும், குமுறுவதும், புலம்புவதும் மாற்றத்திற்கு உதவாது.

இப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் வேலை செய்வேன், இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்பவன் தோற்கத் தன்னைத் தயார் செய்து கொள்கிறான். செயலின் விளைவு எதிர்பாராததாக இருந்தால் ஏன் என்று சிந்தித்து மாற்ற வேண்டியதை மாற்றி விட்டு மறுபடி செயல்பட வேண்டும்.

அவ்வப்போது நம்மை சரி செய்து கொண்டே இருப்பது தான் உண்மையான முன்னேற்றத்திற்கு உதவும். அதுவே நம் வாழ்க்கையை மெருகுபடுத்திக் கொண்டே செல்லும். எல்லா மகத்தான மனிதர்களும், எல்லா வெற்றியாளர்களும், தாங்கள் வேண்டும் விளைவுகளுக்கேற்ப தங்கள் செயல்களை சரிப்படுத்திக் கொண்டே வந்தவர்கள் தான்.

உலகம் அவர்களை அதிர்ஷ்டக்காரர்கள் என்று சுருக்கமாக அழைத்தாலும் சரியான நேரத்தை, சரியானதை, சரியான விதத்தில் செய்தது தான் அந்த அதிர்ஷ்டத்தின் ரகசியம்.
இதுவே வாழ்க்கையில் படிக்க வேண்டிய மிகப்பெரிய பாடம். இதில் தேர்ச்சி பெற்றால் ஒருவன் சாதிக்க முடியாத இலக்குகள் இல்லை, அடைய முடியாத சிகரங்களும் இல்லை.